
மத்திய அரசு தடை போட முயன்ற கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழர்களின் தொன்மை வரலாற்று ஆவணங்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து துவங்குவதாகக் கூறுகிறார்கள்.
இப்போது கீழடி ஆய்வு முடிவுகள் சங்க காலத்தின் கால அளவை நீடித்திருக்கிறது என்று கொள்ளலாம். கி.மு 6ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நதிக்கரை நாகரீகம் ஒன்று இருந்துள்ளது என்பது கீழடி ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. அதாவது இன்றையில் இருந்து 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சிறப்பாக வாழ்க்கை நடத்தியிருக்கிறான் என்பது உறுதியாகியுள்ளது.
இப்போது தமிழகத்தில் அழகன்குளம், ஆதிச்சநல்லூர், அரிக்க மேடு, கொற்கை,பூம்புகார் ஆய்வுகள் அப்படியே இடை நிறுத்தப்பட்டு கீழடி ஆய்வை முன்னோக்கி நகர்த்துகிறார்கள். ஆதிச்சநல்லூர் சோதனை முடிவுகள் சமீபத்தில் நீதிமன்றத்தின் மூலம் வெளியான போது மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் வெளியானது அதாவது கீழடியை விட பழமையானது ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்.
ஆனால், முந்தைய ஆய்வுகளுக்கும் கீழடி ஆய்வுகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடாக சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் கருத்து முக்கியமானது. கீழடியில் முழுமையான ஒரு நதிக்கரை நாகரீகம் இருந்தமைக்கான கட்டடங்கள் முழுமையாக கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொற்கை,பூம்புகார்,அரிக்கமேட்டில் கட்டிடங்கள் இல்லை.
அரிக்கமேடி, கொற்கை, பூம்புகார் ஆய்வுகள் நிலத்தோடு இணைந்து கடலுக்குள்ளும் நடத்தப்பட வேண்டியவை. இதே போன்ற இதைவிட பழமையான வரலாறு கடலுக்குள் உள்ளது. அந்த ஆய்வுகளையும் மேற்கொண்டு தமிழக வரலாறு பயணிக்க வேண்டும்.
நதிக்கரையில் நாகரீகமடைந்த கூட்டமாக வாழ்ந்துள்ள மக்கள். மத அடையாளங்களைப் பேணாமல் வாழ்ந்துள்ளனர் என்பது ஆச்சர்யமான தகவல். நம் மூதாதையர்களுக்கு பழங்குடி நம்பிக்கைகள் இருந்திருக்கலாம்.
மேலும் இங்கே கிடைத்த கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் எலும்புகளில் வெட்டுக்காயங்கள் இருந்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வைகை நதிக்கரையையொட்டி வாழ்ந்த மக்கள் வேளாண்மையை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்த நிலையில் அசைவ உணவு பழக்கவழக்கம் உள்ள மக்களாக வாழ்ந்துள்ளனர்.
தமிழன் வரலாறு சுவையானது மட்டுமல்ல, இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடியது. இதனை பத்திரமாக பாதுகாப்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது.
No comments:
Post a Comment