
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது தேர்வு எழுதியவர்களில்
கிட்டத்தட்ட அனைவரும் பாஸ் ஆகிவிட்டார்கள். குழந்தை பிறப்பதற்கு
முன்பிருந்தே, அதை டாக்டராக்க வேண்டும் என்று கனவு கண்ட பெற்றோர், அதனை
செயல்படுத்த துடிக்கும் காலம் இது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும்
என்று அலையும் பெற்றோருக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மற்றவர்கள் சொல்லாத
விஷயங்களை நினைவுபடுத்துவே இந்த கட்டுரையின் நோக்கம்.
தனியார் கல்வி நிறுவனங்கள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இலவசமாகவே கல்வி தருகிறோம் என்று வலைவிரிப்பார்கள்.
அதன்
பின்னர் கல்லுாரியில் நடைபெறும் முதல் பருவத் தேர்வில் நம் பிள்ளைகளின்
மதிப்பெண், 90 சதவீதத்திற்கும் குறைவாகிவிடும்.
என்னசார் பண்ணுறது உங்க பிள்ளை / பொண்ணு பிளஸ் 2வில் 97
சதவீதம் எடுத்தது, ஆனா இப்போது 89 சதவீதம் தான். நம்ம காலேஜ் பாலிசி
90%க்கு மேல மார்க் எடுத்தால் தான் பிரி, இந்த தடவை மட்டும் பீஸ் கட்டுங்க,
என்று வசூலை தொடங்கி விடுவார்கள்.
கடைசிவரை நம்ம பிள்ளை 90%
மதிப்பெண் எடுக்கவே மாட்டான். இவர்கள் போட்டால் தானே எடுக்க, அப்புறம் என்ன
வழியில்லாமல் பீஸ் கட்ட வேண்டியிருக்கும்.
அடுத்தது எந்த
கல்லுாரியாக இருந்தாலும் படித்து முடிக்கும் வரை பிள்ளை, அல்லது பெண் கல்வி
கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கவனிக்க முடியுமா என்று பார்த்து,
கல்லுாரிகளை தேர்வு செய்யவும்.
முதல்தடவை கட்டணம் செலுத்தவே கடன்
தான் கை கொடுக்கும் என்றால் தயவு செய்து அரசு கல்லுாரிகள் பக்கம் ஒதுங்கி
விடுவது நல்லது. இதில் 2 லாபம் ஒன்று நாமும் தேவையில்லாமல் கடன் வாங்க
வேண்டாம். உங்கள் வாரிசு படித்து முடித்து வெளியே வருவதற்குள்
குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கானவர்கள் கல்லுாரியில் இருந்து வெளியே வந்து
விடுவார்கள்.
அதனால், கல்லுாரியில் நடக்கும் கடைசி தேர்வு எழுதிய
உடன் வளாகத் தேர்வில் வேலை என்ற கற்பனையில் கடன் வாங்க வேண்டாம். அப்புறம்
கடனை அடைக்கவே வாழ்க்கை முடிந்துவிடும்.
இரண்டாவது, நாங்கள் கல்லுாரியில் படித்த காலத்தில் அரசு டவுன் பஸ்தான் எங்கள் வாகனம். படிக்கும் அனைவரும் செய்யும் நல்லது கெட்டது எல்லாம் ஒரே அளவில் தான் இருக்கும். இதனால் எங்களுக்கு எந்தவிதமான மனக்கவலையும் ஏற்படவில்லை.
இதற்கு
பதிலாக வசதியில்லாத குடும்ப வாரிசை, பணக்கார பிள்ளைகள் படிக்கும்
கல்லுாரியில் சேர்த்தால், பெற்றோருக்கு கவலையில்லை. படிப்பவர்கள் தான்,
தாழ்வு மனப்பான்மையில் தவிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் பீஸ்
கட்டுவார்கள், ஆண்டுக்கு 4 டிரெஸ் எடுத்து தருவார்கள்.
ஆனால் பெண்
குழந்தைகளுக்கு செல்போன் டாப் அப், முதல் கலர் கலர் சுடிதார் வரை தேவை
அதிகம். விளைவு ஏதாவது ஒரு பாய் பிரண்டு கிடைக்க வேண்டும். அல்லது பணக்கார
மாணவன், மாணவிக்கு அல்லக்கை வேலை செய்ய வேண்டும்.
பல நிறுவனங்கள்
வேலை கொடுக்கும் வகையில் பாடப்பிரிவை தேர்வு செய்வது நல்லது. உலகிலேயே 10
நிறுவனங்கள் தான் வேலை தரும் படிப்பை எடுத்து முடித்துவிட்டு அதில் வேலை
கிடைக்காவிட்டால், நம்ம ஆளை 10 ஆயிரம் சம்பளத்திற்குதான் வேலைக்கு
எடுப்பார்கள்.
இதற்கு அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். என்னை
பொறுத்தளவில் சட்டம் படிப்பது நல்ல யோசனை, அவ்வளவாக கட்டணமும் கிடையாது.
படிப்பதும் எளிது. ஒரு முறை பாஸ் செய்து விட்டால் சாகிற வரையில் வக்கீல்
தான். நோட்டரி பப்ளிக் ஆகிவிட்டால் கடைசி வரை கையெழுத்துப் போட்டே
சம்பாதிக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி கோர்ட் வளாகத்தில்
ஒரு பெரியவர் மூத்திரப்பையை அணிந்த படி காரில் அமர்ந்து இருப்பார். அவர்
நோட்டரி பப்ளிக் என்பதால் நாள் தோறும் சில ஆயிரம் சம்பாதிப்பார். இதைத்தவிர
பல நிறுவனங்கள் சட்ட ஆலோகர்கள் பதவி தரும்.
அதே நேரத்தில்
இன்ஜினியரிங் படிப்பில் காசு கொட்டி கொடுத்து படித்து விட்டு வெளியே
வந்தால் டிப்ளமோ படித்தவனுக்கு தான் வேலை கொடுக்கிறார்கள். அதை தவிர ரூ. 6
ஆயிரம் சம்பளத்தில் பலர் வேலை செய்கிறார்கள். வளாகத் தேர்வு என்பதே மாயமான
வியாபாரம் ஆகிவிட்டது.
எங்கள் கல்லுாரியில் மெரிட்தான். அல்லது
செமஸ்டருக்கு 5 ஆயிரம் டாலர் கட்டணம் என்று வசூல் செய்கிறார்கள். இன்றைக்கு
படிக்க வைக்க செலவு செய்த பெற்றோர் தான் வேலைக்கு சென்ற பின்னரும்
செலவுக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலை.
டாக்டர் நிலையும் அதுதான். பல டாக்டர்கள் மெடிக்கல் தயவில் தான் ஆரம்ப கட்ட பிழைப்பே நடக்கிறது. கார்ப்ரேட் மருத்துவமனையில் வேலை என்றால் சம்பளம் என்னவோ சில ஆயிரம் தான். அதன் வாசலில் கிளினிக் வைத்தால் சீண்டக் கூட ஆள் இருக்காது. அனுபவம் பெறும் வரையில் போராட்டம் தான்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அதே தான்.
என்ன ஒரே ஒரு லாபம் என்றால், 58 வயதுக்குள் அரசு வேலை கிடைக்கும். இதைத்
தவிர அரசு செய்யும் அக்கிரமங்களும் உள்ளன.தனியார் நர்சிங் கல்லுாரியில்
படித்தால் அரசு வேலை கிடைக்காது ( இது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ள
நிலை). சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டு படித்தால் தான் ஆய்வக
உதவியாளராக அரசு வேலை கொடுக்கும். ஆனால் இந்த இரண்டு படிப்புகளுக்கும்
வீதிக்கு வீதி நிறுவனங்கள் உள்ளன.
இஸ்லாமிய பெரியவர் ஒருவர் படிப்பை
பற்றி எதுவுமே தெரியாவிட்டாலும், பெண்ணை இஸ்லாமியர்கள் நடத்தும்
கல்லுாரியில் சேர்க்க வேண்டும் என்றார். அவள் பட்டம் பெறுகிறாளோ இல்லையோ;
நம் மார்க்கத்தின் படியே வெளியே வருவாள். புர்கா அணிந்து செல்வதை
கல்லுாரியில் யாரும் கேளி செய்ய மாட்டார்கள் என்று நண்பரிடம் கூறிக்
கொண்டிருந்தார்.
ஒரு சில கல்லுாரிகளில் வேஷ்டிதான் சீருடை, தாவணி
அணிவது கட்டாயம் இப்படியெல்லாம் கூட கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
இப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில், தேவையற்றவை என்று பிறர் விமர்சனம்
செய்வதையெல்லாம் யோசித்து கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யுங்கள்.
எந்த
கல்லுாரியில் எது படித்தாலும் தலையெழுத்து எப்படி இருக்கிறதோ அப்படித்தான்
நடக்கும். இதற்காக ஜோசியம் பார்க்கும் பெற்றோர் கூட உள்ளனர். ஒன்றை
மட்டும் புரிந்து கொள்ளுங்கள், படிப்பிற்கும் வேலைக்கும் எவ்விதமான
சம்பந்தமும் இல்லை. அப்படி ஒன்றாக அமைவது வெகு சொற்பம் தான்.
அதனால்
ரொம்ப பாடுபட்டு கல்லுாரியில் சேர்க்க வேண்டும் என்று முயற்சி
செய்யாதீர்கள். கல்லுாரி நடத்தும் முதலாளிகள், தொடங்கிய முதலாளிகளை
பாருங்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்க மாட்டார்கள். அதே இடத்தில்
சில ஆயிரம் சம்பளத்திற்காக பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர் வேலை
செய்வார்.
கல்வி, பட்டம் எல்லாம் வெறும் வேலை தரும் நிறுவனங்களின்
வாசலை திறக்க உதவும் கருவி தான். வேலையில் வெற்றி பெற அது எவ்வித்திலும்
உதவாது. அதனால் உங்கள் மகன், அல்லது மகள் வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை
என்று யோசித்து அதற்கு ஏற்ப முயற்சி செய்யுங்கள்.
சில பெற்றோர் ஒரே
பையன் அவனை வெளியே அனுப்பி விட்டு நாங்கள் தனியே இருக்க வேண்டுமா என்று
கேள்வி எழுப்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவையில்லாமல் உள்ளூரில் வேலை
கிடைக்காத பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டாம். அதே போல கல்லுாரியில் படித்து
முடித்ததும், மகளுக்கு திருமணம் தான் என்று முடிவு செய்யும் பெற்றோர்
எதற்கு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைக்க வேணடும். அது அந்த
பெண்ணுக்கும் உதவாது, அவருக்கு பதிலாக மற்றொரு பெண்ணுக்கும் இடம் இல்லாமல்
போகும்.
அதே நேரத்தில் பிராமணர் போன்ற இனங்களில், பெண் எந்தளவுக்கு
படித்துள்ளாரோ அதற்கு இணையாக மாப்பிள்ளை தேடுவார்கள். அவர்கள் கேட்கும்
வரதட்சணை கொடுக்க வழியிருக்காது. இந்த நிலையில் கலை, கல்லுாரியில் படிக்க
வைத்து விட்டு போட்டித் தேர்வுகளுக்கு அவரை தயார் செய்தால், அரசு வேலையாவது
கட்டாயம் கிடைக்கும். இது போன்றவற்றை நினைவில் கொண்டு கல்லுாரி, படிப்பை
தேடுங்கள்.
ஜெயின் குரு ஒருவரிடம், கராத்தே பழக வேண்டும் என்று
ஒருவன் சேர்ந்தானாம். அவர் அவனை சேர்த்துக் கொண்டு மடத்தில் உள்ள அனைத்து
வேலைகளையும் வாங்கினாராம். கடுப்பான சீடன், நான் இங்கே பாத்திரம் தேய்க்க
வரவில்லை கராத்தே கற்க வந்துள்ளேன் என்றான்.
ஆமாள்ள என்ற குரு இனி
நீ வேலை செய்யும் போது அடிப்பேன் நீ தடுக்க வேண்டும் என்றாராம். அதே போல
அடிவிழுந்தது. ஒரு கட்டத்தில் அவன் தடுத்துவிட்டான். தம்பி இனி அடி கையில்
விழாது குச்சி என்றார். சில நாட்கள் கடந்தது தரையை கூட்டிக் கொண்டிருந்த
சீடன் தன்னை தாக்க வந்த குச்சியை தடுத்துவிட்டான்.
பின்னர் குச்சி
கத்தியாக மாறியது. அதையும் தடுத்தான் சீடன். அப்புறம் குரு சொன்னார். தம்பி
இனிமே அடிவிழுகும் ஆனால் நீ துாங்கும் போது மட்டும் தான் என்றார்.
அதிர்ந்தான் சீடன். இந்த ஆளு கராத்தே கற்றுக் கொடுப்பானா மாட்டானா, நாடு
முழுவதும் இவனை சிறந்த கராத்தே வீரன் என்கிறார்களே நம்மை ஏன் இந்த கொடுமை
படுதுறான் என்று எண்ணினான்.
சரி என்றதும் துாங்கும் போது
அடிவிழுந்தது, கை குச்சியாக மாறியது, கத்தியாக மாறியது. கடைசியில் ஒரு நாள்
சீடன் துாங்கிக் கொண்டிருந்த போதே கத்தி வர அதை சீடன் தடுத்து பிடித்தான்.
உடனே குரு கூறினார். தம்பி கராத்தேயின் முக்கிய பாடம் விழிப்புணர்வுதான்.
அது
இப்போது உனக்கு நன்றாக உள்ளது. இனி நீ யாரிடம் போய் வேண்டுமானாலும்
கராத்தே கற்றுக் கொள்ளலாம் என்று வாழ்த்தி வழி அனுப்பினார். அந்த குருவின்
கதைதான் இந்த கட்டுரையின் அடிப்படை.
இவற்றையெல்லாம் கடைபிடித்து,
நீங்கள் கல்லுாரியில் வாரிசை சேர்த்தால் அவன் படித்து பாசாகிறானோ இல்லையோ,
வாழ்க்கையில் கட்டாயம் பாஸ் ஆவான். அதையும் தாண்டி கடைசிவரை உங்களையும்
பாதுகாப்பான்.
பிளஸ் 2 முடித்த கண்மணிகள் சிந்தித்து தங்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க என் வாழ்த்துக்கள்...
newstm.in
No comments:
Post a Comment