Latest News

பட்ஜெட் பெயரில் மோடி காமெடி பண்ணுகிறார்: ஸ்டாலின் விமர்சனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் தணக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

"இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல், யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்? மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் அது எல்லாம் எங்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும். பிரதமர் நரேந்திர மோடியை நல்லவர் என்று சொன்னால், அவரை விட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். நீங்களே சிரிக்கிறீர்கள். இருவரையும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். 

காரணம் அந்த அளவிற்கு ஒரு மோசமான ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர் நல்லவர் என்று சொன்னால் உங்களுக்கே சிரிப்பு வருகின்றது என்றால், அங்கே ஒரு அம்மா மோசடியாளர் என்று சொல்கிறார் பாருங்கள். அந்த அளவிற்கு மோசமான ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பொய் சொல்லியே மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தார்.

நான் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வேன் இதைச் செய்வேன், வானத்தை கிழிப்பேன், வைகுண்டத்தை காட்டுவேன் என பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் மோடி.

ஏற்கனவே, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து இருக்கக்கூடிய மோடி அவர்கள் இப்பொழுது மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி இருக்கின்றார்.

விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப் போகிறேன் என்று புதிதாக ஒரு கதை விட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு பெரிய பொய்யை சொல்லி இருக்கின்றார். விவசாயினுடைய கோவணத்தை அவிழ்த்து விட்டு ஓட விட்டவர்கள், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். அது உங்களுக்கு தெரியும்.

மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று இரவில் இருந்து போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். நீங்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அவர் மேற்கு வங்கத்தின் முதல்வர் மற்றும் இரும்புப் பெண்மணி என்று பெயர் பெற்றவர். அங்கு பி.ஜே.பி உள்ளே நுழைய முடியாது, அதனால் மோடிக்கு ஆத்திரம் வந்து அந்த அம்மையாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ள காரணத்தினால் அதற்காக தர்ணா போராட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் துவங்கியிருக்கிறார். அந்த மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் சென்று விவசாயிகளுக்காக அதைச் செய்யப் போகின்றேன், இதைச் செய்யப் போகின்றேன் என்று கதை விட்டு இருக்கின்றார்.

இன்னொன்றும் சொல்லி இருக்கின்றார், விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்தால் அதில் எந்த பயனும் கிடையாது, பலனும் கிடையாது, நன்மையும் கிடையாது என்று பிரதமர் மோடி அதையும் சொல்லி இருக்கின்றார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதே தவறு என்ற கருத்தைச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால், விவசாயிகள் வாங்கி இருக்கக்கூடிய கடன் எவ்வளவு கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதிகபட்சம் 10,000/- ரூபாய் அல்லது 20,000/- ரூபாய், 50,000/- வாங்கியிருப்பார்கள். அதிகபட்சம் 1,00,000/- ரூபாய் வாங்கி இருப்பார்கள். அதற்குமேல் எந்தக் கடனும் விவசாயிகள் வாங்கி இருக்க வாய்ப்பே கிடையாது. அதை மோடி தள்ளுபடி செய்ய மாட்டார்.

ஆனால், கோடி கோடியாகக் கொள்ளை அடித்து பெரிய பணக்காரர்கள், பெரிய பெரிய மிராசுதாரர்கள், பெரிய கோடீஸ்வரர்கள் வங்கியில் வாங்கியிருக்கும் கடன்கள் 1000 கோடி, 2000 கோடி, 3000 கோடி 15,000 கோடி ரூபாய்கள், அதையெல்லாம் தள்ளுபடி செய்து இருக்கின்றார். எனவே, பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் கடன்களை தள்ளுபடி செய்கின்றார் மோடி. ஆனால் விவசாயிகள் வாங்கி இருக்கக்கூடிய 10,000/- ரூபாய் 20,000/- ரூபாய், 50,000/- ரூபாய் என்று வாங்கி இருக்கக்கூடிய கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மோடிக்கு மனது வரவில்லை.

மோடி பட்ஜெட்டில் ஒரு பயங்கரமான காமெடி பண்ணியிருக்கிறார் அது என்னவென்று கேட்டீர்களென்றால், விவசாயிகளுக்கு 6,000/- ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அறிவிக்கப்பட்டிருக்கும் 6,000 ரூபாயை மொத்தமாக கொடுக்கமாட்டார். 3 தவணையாக 2000 - 2000 - 2000 என்று கொடுப்போம் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கின்றார். விவசாயிகளுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய உரத்தினுடைய விலை ஆறு மாதத்தில் 20% விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே 6,000 ரூபாய் கொடுப்பதினால் அந்தப் பிரச்னை தீர்ந்து விடப் போகிறதா என்று கேட்டால் விவசாயிகளுடைய பிரச்னை நிச்சயம் தீரப்போவது இல்லை, அது உண்மை. விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறது என்று சொன்னால், ஜி.எஸ்.டி வரியில் இருந்து உரத்திற்கு, பூச்சி மருந்திற்கு அந்த வரிவிலக்கை நீக்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு அவர்கள் செய்யக்கூடிய புண்ணியமாக இருக்கும்.

உரத்திற்கு 5% வரி, பூச்சி மருந்திற்கு 10% வரி. வரியைப் போட்டு விட்டு பணத்தையும் பறித்துக்கொண்டு அதிலிருந்து திருப்பிக் கொடுக்கின்றார்கள். இது சலுகையா? இது சலுகையல்ல திருட்டு. இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள்.

அதைப் பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள். அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
ஆகவே, நாடே இன்றைக்கு ஒரு சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. மத்தியில் அப்படி ஒரு ஆட்சி. மாநிலத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஊழல் செய்தது மட்டுமல்ல, கரப்சன் - கலெக்சன் - கமிஷன் மட்டுமல்ல, லஞ்சம் மட்டுமல்ல, எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை."
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.