ஆப்பிரிக்க நாடான கேமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்
இருந்து பெருமளவு மாணவர்கள் கூண்டோடு கடத்தப்பட்டதாக அஞ்சப்படுகிறது.
வட
மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் நடந்த இச்சம்பவத்தில்
குறைந்தது 79 பேர் கடத்தப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மற்றும்
ராணுவத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி முகமைகள் தகவல் தெரிவிக்கின்றன.
பிபிசிக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி ஆயுதம் தாங்கிய ஆட்கள் திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளனர்.
கேமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் சமீபத்திய ஆண்டுகளில் பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம்
பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடாகப் பிரிக்கவேண்டும் என்று கோரிவரும்
ஆயுதக் குழுக்கள் பள்ளிகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு
விடுத்திருந்தன.
ஆனால், இந்த மாணவர்கள் கடத்தலை தாங்கள்தான் செய்ததாக எந்தக் குழுவும் ஒப்புக்கொள்ளவில்லை.
வட
மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் ஆங்கில சட்ட, கல்வி
அமைப்புகளுக்கு போதிய அங்கீகாரம் தருவதற்கு அரசு தவறிவிட்டதாக
சொல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதியின் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள்
உள்ளிட்டோர் மேற்கொண்ட வெகுஜனப் போராட்டத்தை ஆயுதப் படையினர் ஒடுக்கினர்.
இதையடுத்து அம்பாஜோனியா என்ற புதிய நாட்டை உருவாக்கவேண்டும் என்ற
கோரிக்கையுடன் 2017ம் ஆண்டு ஆயுதக் குழுக்கள் உருவாயின.
பிரெஞ்சு
சட்ட, கல்விப் பாரம்பரியத்தில் பயின்றவர்களையே பெருமளவில் முக்கியமான
பதவிகளில் அமர்த்துவதாகவும், அந்நாட்டின் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினர்
புறக்கணிக்கப்படுவதாகவும் அரசு குற்றம்சாட்டப்படுகிறது.
கேமரூனில் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 20 சதவீதம் இருப்பர்.
1982-ம்
ஆண்டில் இருந்து இந்நாட்டின் அதிபராக இருக்கும் பால் பியா ஏழாவது முறையாக
சமீபத்தில் மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தேர்தலில்
மோசடிகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினாலும், தேர்தல்
முடிவுகளை சட்டப்படி மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
தோல்வியடைந்தன.
No comments:
Post a Comment