ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் புகைப்படம்
உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. உயிரிழந்த
சிறுமியின் புகைப்படத்தை பார்த்த உலக நாடுகள் ஏமனில் நடந்து வரும்
உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி
வருகின்றன.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன்
நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச்
சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல்
உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு
ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான்
ஆதரவு அளித்து வருகிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து, ஹவுத்தி
கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சத்துக்கு
அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை
தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் இந்த
போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். ஏமனின்
ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர்
என்று ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அகதிகள் முகாமில்
இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக
உயிரிழந்தார். முன்னதாக 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, எலும்பும் தோலுமாய்
ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் புகைப்படத்தை வெளியிட்டது.
அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அனல் ஹுசேனின் பரிதாப புகைப்படத்தை
பார்த்த உலக நாடுகள் ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அகதிகள் முகமில்
இருந்த அமல் ஹுசேன் பட்டினியால் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக
உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமல் இறப்பு குறித்து அவரின் தாய்
மரியம் அலி பேசுகையில், " என் இதயத்தைக் கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன்.
அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற
குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது " என்று கண்கலங்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment