Latest News

தென்னாட்டு பகத்சிங் ராமு

தென்னாட்டு பகத்சிங் ராமுதமிழகம் மறைந்த எத்தனையோ சுதந்திர போராட்ட தியாகிகளில் ஒருவரான ராமுவின் நினைவு நாள் இன்று (7/7/18) இதனை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு கட்டுரைநாட்டின் விடுதலைக்கு வித்தாக தன்னை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டோர் பலருண்டு அவர்களில் பலர் யார் என்பதே இன்றைய தலைமுறைக்கு தெரியாது அவர்களின் தொண்டும் தியாயகமும் தெரிந்தால்தான் நாட்டின் மீதான பற்றும் பாசமும் அதிகரிக்கும்.அவர்களில் ஒருவர்தான் பதினெட்டு வயதில் துாக்கில் போடப்பட்ட தமிழ் தியாகி ராமுஅவரின் நினைவு நாள் இன்று.தேசத்தின் எல்லைக் கோடுகளாய் வௌளைப் பாம்புகள் சூழ்ந்து இருந்து நம்மை பாழ்படுத்திக் கொண்டிருந்த நேரம்.சுவாசிக்க கூட சுதந்திரமில்லாமல் போகுமோ? என்ற கோபக்கினி பரவிக்கொண்டிருந்த காலம்தேசம் காக்க எந்த தியாகத்திற்கும் அர்ப்பணிக்கத் தயங்காத இளைஞர்கள் பலர் தலைவர் நேதாஜியின் தலைமையை ஏற்று அணி அணியாக புறப்பட்ட சூழ்நிலைவௌளையர் கையில் இருந்த துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த போதும் அவர்களது குண்டாந்தடிகளால் தலை பிளந்த போதும் 'ஜெய்ஹிந்த்' என வீராவேச முழக்கமிட்டு இளைஞர்கள் ரத்தம் சிந்திய காலகட்டம்.இப்படி பலர் உதிரத்தையும் உயிரையும் உரமாக கொடுத்து பெற்ற சுதந்திரம்தான் நாம் இன்று அனுபவிப்பது.அவர்களில் ஒருவர்தான் ராமு.ராமாநபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பக்கம் உள்ள தும்படைக்கா கோட்டை என்ற குக்கிராமத்தில் 1926 ம் ஆண்டு பிறந்தவர்தான் ராமு.கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள திருஇருதயபுரம் பள்ளியில் 2ம் வகுப்பு வரை படித்தார்.விவசாயியான அப்பா ராமலிங்கத்திற்கு போதிய வருமானம் இல்லாததால் பினாங்கு சென்றார் போகும் போது மகன் ராமுவையும் உடன் அழைத்துச் சென்று அங்குள்ள ஜூனியர் கேம்பிரிட்ஜ் பள்ளியில் படிக்கவைத்தார்.படித்துக் கொண்டிருந்த காலத்தில் நாட்டு மக்களின் அவலம் தீர வேண்டும் என்றால் தேசம் விடுதலை பெறுவது ஒன்றே வழி என்பதை பலரும் சொல்லிக்கேட்டு வளர்ந்தவருக்கு அதற்கான தீர்வைத்தரும் தலைவராக நேதாஜியை பார்த்தார்.பினாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நேதாஜியை மிகவும் பிடித்துப் போனது படித்த படிப்பை விட்டுவிட்டு தந்தையின் ஆசியுடன் நேதாஜியிடம் போய்ச் சேர்ந்தார்.ராமுவின் வீரத்தையும் விவேகத்தை பரிசோதித்த நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தின் ஒற்றர் படை பிரிவில் சேர்த்துக் கொண்டார்.பாராசூட்டில் இருந்து குதிக்கவும் வயர்லெஸ் கருவியை இயக்கவும் சங்கேத மொழியில் பேசவும் ராமு பயிற்சி பெற்றார்.இந்திய தேசிய ராணுவத்தின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, மற்றும் பிரிட்டிஷாரின் விஷயங்களை இந்திய தேசிய ராணுவ தலைமையகத்திற்கு தெரிவிப்பதற்கான பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.இவருடன் இன்னும் இரண்டு பேரை சேர்த்து மூன்று வீரர்களையும் ரகசியமாக நீர்முழ்கி கப்பல் வழியாக இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர்.டி.பி.குமரன்,சேதுமாதவன் மற்றும் ராமு ஆகிய மூவரும் நேதாஜியிட்ட பணியை நிறைவேற்றப் போகிறோம், நாட்டின் விடுதலைக்காக பணியாற்றப்போகிறோம் என்ற துடிப்புடன் வந்திறங்கியபோது பிரிட்டிஷ் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.பிரிட்டிஷாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தப்பி ஒடினர், அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் குமரன் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.நினைத்திருந்தால் குமரனைவிட்டுவிட்டு இருவரும் தப்பி இருந்திருக்கலாம் ஆனால் நட்புதான் பெரிது என்ற காரணத்தால் குமரனைக் காப்பாற்றப் போய் மூவருமே பிரிட்டிஷாரிடம் பிடிபட்டனர்.பிரிட்டிஷ் ராணுவத்தினர் கொடுத்த சித்திரவதையை தாங்கமுடியாமல் சேதுமாதவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.குண்டடிபட்ட காலோடு குமரன் நடைப்பிணமானார் ராமுவோ அம்மை நோய் தாக்கி உருக்குலைந்து போனார்.ஒற்றராக பணியாற்ற யாரால் வந்தீர்கள்? என்ன காரியமாக வந்தீர்கள்? என்பதை மட்டும் சொன்னால் போதும் தண்டனைக்குறைப்பு மட்டுமல்ல விடுதலைக்கும் வாய்ப்பு உண்டு என்று சொன்னபோதும் ராமு வாய் திறக்கவில்லை.அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது கூட ராமுவின் தாய்க்கும் உறவினர்களுக்கும் தெரியாதபடி அலிகார் சிறையில் ஆரம்பித்து தமிழகத்து சிறை வரை அவரை மாற்றி மாற்றி சிறைவைத்தனர்.ஒவ்வொரு சிறையிலும் அவரை சித்ரவதை செய்யமட்டும் மறந்தார்கள் இல்லை. கடைசியில் ஒரு நாள் இவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது இவர் பதினெட்டு வயதான பாலகன் என்று சொல்லியும் கூட வௌளைக்கார நீதிபதி சட்டை செய்யவில்லை.

துாக்கில் தொங்குவதற்கு முதல் நாள் தன் தாயாருக்கு நீண்ட கடிதம் எழுதினார் அதில் தேசநலனிற்காக உயிரைக்கொடுப்பதில் மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டு இருந்தார். கடிதம் எழுதிய மறுநாள் 07/07/1944 ந்தேதி காலை சென்னை சிறைச்சாலையில் ராமு துாக்கில் போடப்பட்டார்,அவர் யாருமற்றவர் என்று காரணம் சொல்லி ஒட்டேரி சுடுகாட்டில் புதைக்கப்பட்டார். ராமு எழுதிய கடிதம் நீண்ட நாள் கழித்தே அவரது தாய் காளியம்மாளுக்கு கிடைத்தது.கடிதம் படித்த நாளில் இருந்து பித்துப்பிடித்தது போலான காளியம்மாள் மகன் இறந்தை ஏற்றுக்கொள்ளாமல் சிறைச்சாலைகளின் வாசலுக்கு போய் நின்று கொண்டு 'எம் புள்ள உள்ளே இருக்கானா?' என்று கேட்டபடியே கடைசிகாலம் வரை இருந்தார், அப்படியே இறந்தார். ராமுவின் சகோதரிகளில் ஒருவரான பஞ்சவர்ணம்மாள்தான் ராமு எழுதிய கடிதங்களையும் அவரது நினைவுகளையும் சுமந்து கொண்டு வாழ்ந்து வந்தார்,அவரும் கடந்த 2005ல் இறந்து போனார்.

இப்போது இவரது மருமகன் மலைராஜ்தான் தென்னாட்டு பகத்சிங்காக வாழ்ந்து மறைந்த ராமுவின் வரலாறை துாசு தட்டி எடுத்து பரப்பி வருகிறார்.(8610872569) இவரைப் போலவே மதுரையில் உள்ள நேதாஜி புகழ் பரப்புவதையே லட்சியமாகக் கொண்ட ஜெய்ஹிந்த் சுவாமிநாதன் ராமுவின் நினைவு நாளான்று அவர் படித்த பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கி ராமுவைப்பற்றி நினைவுகளை பல வருடங்களாக பகிர்ந்துகொண்டு வருகிறார்.(9994335501)இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் இந்த நிகழ்வை பள்ளியில் நேற்றே நடத்திமுடித்தார்.ராமுவுடன் இருந்து இறந்த குமரனின் நினைவாக கோழிக்கோட்டில் ஒரு தெருவிற்கே அவரது பெயரை வைத்து கேரளா மாநில அரசு கவுரவம் சேர்த்துள்ளது, ஆனால் ராமுவின் தியாக வரலாறோ தும்படைக்காகோட்டைக்கு உள்ளேயே அவரது வீட்டைப் போல பாழ்பட்டு கிடக்கிறது.இவரது சுதந்திரபோராட்ட வரலாறு வௌிச்சத்திற்கு வரவேண்டும்.அவரது நினைவு தபால் தலை வௌியிடவும்,படித்த பள்ளியில் மார்பளவு உருவச்சிலை வைக்கவும், இடிந்து பாழடைந்து கிடக்கும் அவர் பிறந்த வீட்டை புதுப்பிக்கவும், அவரது நினைவுகளை போற்றவும் அரசும் மக்களும் முன்வரவேண்டும்,அதுதான் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு கொடுக்கும் மரியாதையாகும்.-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.