Latest News

முதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்

வாணியம்பாடி என்றதும் அது முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊர் என்பதும், அதன் சுற்று வட்டாரத்தில் பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன என்பதும், நூற்றாண்டைத் தொடும் ‘இஸ்லாமியா கல்லூரி’ அங்கு இயங்கி வருகிறது என்பதும், கவிக்கோ அப்துல் ரகுமான் அக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார் என்பதும் நமது நினைவிற்கு வரும். ஆனால் வாணியம்பாடி, ‘இஸ்லாமியா கல்லூரியை’த் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்த தொழிலதிபர் மலங்கு அஹமது பாஷா பகதூர் அவர்களைப் பற்றி இன்றையத் தலைமுறையினருக்குத் தெரியுமா? சந்தேகமே!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிலில் முன்னணிப் பங்கு வகித்தனர். மேல் விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் சாகிப். வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப், அப்துல் சுப்ஹான் சாகிப் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் தொழில் அதிபர்கள் இருந்தனர். இவர்கள் முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்திலும். கல்வி வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர். தங்களிடமிருந்த செல்வத்தின் ஒரு பகுதியை இப்பெருமக்கள் இதற்காகச் செலவிட்டனர். அவர்களில் ஒருவர் தான் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்
பிறப்பு - படிப்பு:-
மலங்க் அஹமது பாஷா வாணியம்பாடியில் 17.09.1893 அன்று பிறந்தார் இவரது தந்தையார் பெயர் மலங்க் ஹயாத் அப்துல் ரகுமான் சாகிப்.
malagஇவர் சென்னையில் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வந்தார். பாஷா சாகிப் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை சென்னை சைதாப் பேட்டையிலிருக்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றுத் தேறிய பின்னர், சென்னை தாம்பரத்திலிருக்கும் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து தத்துவ இயலில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெற்றார்.
அத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக இவருக்கு கல்லூரி நிர்வாகம் தங்க மெடல் வழங்கிப் பாராட்டியது. சென்னை மாகாணத்தில் இத்தகைய சிறப்பினைப் பெற்ற முதல் மாணவர் இவர் என்பது மட்டுமின்றி, வாணியம்பாடி முஸ்லிம் சமூகத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையும் இவருக்குண்டு. இத்தகைய உயர்நிலை அடைந்ததற்காக வாணியம்பாடி முஸ்லிம் சமூகம் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.
தொழில் துறையில்
பட்டம் பெற்றபின், அரசுப் பணியில் சேர்ந்திட இவர் ஆர்வம் காட்டவில்லை. தனது தந்தையார் சென்னை பெரிய மேட்டில் நடத்தி வந்த தோல் பதனிடும் நிறுவனமான மலங்க் ஹயாத் அன்கோவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பொருளாதாரம், வணிகம், நிதி மேலாண்மை ஆகிய துறைகளில் பெற்றிருந்த அறிவு, தொழிலில் இவருக்குப் பெரிதும் துணை நின்றது. மிகப் பெரிய தொழிலதிபராக உருவெடுத்தார். சில ஆண்டுகளிலேயே மலங்கு டிரேடிங் கம்பெனி என்ற தோல் பதனிடும் நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
தோல் பதனிடும் தொழிலில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பிற தொழிலதிபர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். வணிகத்தில் நாணயமிக்கவராகவும், நேர்மையானவராகவும் திகழ்ந்தார். தொழில் தர்மத்தையும், உயரிய மரபுகளையும் எந்தச் சூழ்நிலையிலும் வழுவாது கடைப்பிடித்து வந்தார்.
இத்தொழிலில் புதிதாக ஈடுபட்ட பல முனைவர்கள் இவரை நாடி வந்து வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுப் பயனடைந்தனர். தென்னிந்திய தோல் வணிகர் சங்க நிறுவனர்களில் ஒருவராக இவர் இருந்தார். இத்தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகி அவற்றைத் தீர்த்து வைத்தார்.
முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தோல் பதனிடும் தொழில் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. 1923ஆம் ஆண்டு இவரது நிறுவனமும் பெரும் நட்டத்திற்கு உள்ளாகி மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் இவர் மனம் தளரவில்லை. காப்பீடு செய்திருந்த இம்பிரியல் வங்கியிடமிருந்து மிகப் பெரும் தொகையை ஈட்டுத் தொகையாகப் பெற்றுக் கொண்டு 1927ஆம் ஆண்டு மீண்டும் தனது வணிகத்தைத் தொடங்கினார். 1930களில் சென்னை பெரியமேடு பகுதியில் அவர்தான் முன்னணி தொழில் அதிபராக விளங்கினார். தோல் பதனிடும் தொழிலுக்குத் தேவைப்படும் ரசாயனப் பொருள்களை லண்டனிலிருந்து இறக்குமதி செய்து பிற வணிக நிறுவனங்களுக்கு மறு விற்பனை செய்தார். சிறிய தோல் நிறுவனங்களிடமிருந்து பதப்படுத்தப்படாத தோல்களை வாங்கி அவற்றை தனது நிறுவனத்தில் பதப்படுத்தும் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்.
தோல் பதனிடும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொள்கை முடிவுகள் எடுக்கின்ற போது, சென்னை மாகாண அரசு இவரைக் கலந்தாலோசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. 1937 ஆம் ஆண்டில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்ற சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, தோல் தொழிலுக்கு வணிக வரி விதிப்பது சம்பந்தமாக இவரைக் கலந்தாலோசனை செய்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இவரது செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது.
கல்வி வளர்ச்சியில்
முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் பாஷா சாகிப் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தார். வாணியம்பாடி நகரில் தொடங்கப்பட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் ஆயுள் கால உறுப்பினராகவும் இருந்தார். 1916 ஆம் ஆண்டு இந்தக் கல்விச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று திறம்படச் செயல்பட்டார். தனது ஆயுள் காலம் முழுமையும் இச்சங்கத்தில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருந்து பணியாற்றினார். இச்சங்கம் தான் 1918 ஆம் ஆண்டு வாணியம்பாடி நகரில் ‘இஸ்லாமியா கல்லூரி’ என்ற கல்லூரியைத் தொடங்கியது.
1919ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது. தமிழ் நாட்டில் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட முதல் அரசு உதவி பெற்ற கல்லூரி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கும் பாரம்பர்யச் சிறப்பு மிக்க இக்கல்லூரியில் தற்போது இரண்டாயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் தாளாளராகவும் பாஷா சாகிப் சில ஆண்டுகள் பதவி வகித்தார். தனது பதவிக் காலத்தின் போது கல்லூரியில் உருது மற்றும் இஸ்லாமிய சமய படிப்புகளைக் கொண்டு வந்தார்.
முஸ்லிம் கல்வியாளர்களால் சென்னை நகரில் தொடங்கப்பட்ட தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்திலும் பாஷாசாகிப் முக்கியப் பொறுப்புகள் வகித்தார். இச்சங்கத்தின் செயலாளராக ஏழு ஆண்டுகளும். தலைவராக இரு ஆண்டுகளும் பதவி வகித்தார். சங்கத்தின் கல்விப் பணிகளுக்காக சென்னை நகரத்தின் வீதிகள் தோறும் சென்று கடை கடையாக ஏறி இறங்கி நிதி திரட்டினார். இச் சங்கம் தான் சென்னை இராயப்பேட்டையில் ‘புதுக்கல்லூரி’ என்ற புகழ் பெற்ற கல்லூரியை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி. மாநிலம் அலிகர் நகரில் செயல்பட்டு வரும் இந்திய முஸ்லிம்களின் முதல் பல்கலைக் கழகமான அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திற்கும் நன்கொடை வழங்கியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துக் கல்வி பணி ஆற்றியுள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்குத் தாராளமாக நிதி உதவி செய்துள்ளார். படித்த இளைஞர்களை வர்த்தகத்தில் ஈடுபடுமாறு ஊக்குவித்துள்ளார்.
அரசியல் ஈடுபாடு
பாஷா சாகிப் அகில இந்திய முஸ்லிம் லீகில் இணைந்து அதன் நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டார். அன்றைய சென்னை மாகாண முக்கிய முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சென்னை மாநகராட்சி உறுப்பினராக 1936ம் ஆண்டுமுதல் 1941 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் (பெரியமேடு பகுதி) 1937ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக வடஆற்காடு மாவட்ட முஸ்லிம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1946 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார். சட்ட சபையில் முஸ்லிம்களின் பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தார். மக்களை அறியாமையிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுவிப்பதே தனது லட்சியம் எனச் சூளுரைத்துச் செயல்பட்டார். சென்னை மாகாணத்தின் தமிழ் பகுதி முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு முஸ்லிம் ஜமாஅத்துகளையும், அமைப்புகளையும் சந்தித்து பிரச்னைகளைக் கேட்டறிந்தார். அவற்றின் தீர்வுக்குப் பாடுபட்டார்.
முஸ்லிம்லீக் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டுமென்பதிலும் குடும்ப அரசியல் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அன்றையக் கால கட்டத்தில் சென்னை மாகாண முஸ்லிம் லீகின் தலைவராகப் பொறுப்பு வகித்த ஜனாப் எம்.ஜமால் முகம்மது சாகிபுடன் அவருக்கு இணக்கமான உறவு இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் 1940 ஆம் ஆண்டு ஜமால் முகம்மது சாகிப் மாகாணத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் ஹமீது கானுடன் பாஷா சாகிப் இணைந்து செயல்பட்டார். 1941ஆம் ஆண்டு முஸ்லிம் லீகின் 28வது தேசிய மாநாட்டை சென்னையில் நடத்திடுமாறு அகில இந்தியத் தலைமை மாகாணத் தலைமையை கேட்டுக் கொண்டபோது, மாநிலத் தலைவர்கள் இத்தகைய பெரிய பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்திட முடியுமா என தயக்கம் காட்டினர். மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திட பெருமளவு தேவைப்படும் நிதியை திரட்டிட முடியுமா என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாக இருந்தது. எனினும் பாஷா சாகிப் ‘எப்படியும் மாநாட்டை நடத்துவோம்.
தயக்கம் வேண்டாம்’ என மாகாணத் தலைவர்களுக்கு ஊக்க மூட்டினார். அவரே 28வது மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கட்சியின் மாகாணத் தலைவர் அப்துல் ஹமீதுகான் வரவேற்புக் குழுத் தலைவர்). சென்னை மாகாணமெங்கும் அவர் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மாநாட்டுச் செலவுகளுக்காக நிதி திரட்டினார். மாநாடு திட்டமிட்டபடி சென்னை நகரில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11, 12, 13,14 தேதிகளில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
muthal tha
மாகணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான லீக் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக மாகணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 19 சிறப்பு ரயில்களை இரயில்வே துறை இயக்கியதாகவும், 75000 தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் மாநாட்டில் நுழைவுக் கட்டணமாக ஒரு பெருந்தொகை வசூலானது என்றும் ‘மெயில்’ ஏடு குறிப்பிட்டிருந்தது. இம் மாநாட்டின் வெற்றிக்கு பாஷா சாகிப்பின் அயராத முயற்சிகளே காரணம் என்றால் அது மிகையல்ல.
இம் மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைவர் காயிதே ஆஜம் ஜின்னா சாகிபின் ஆங்கில உரையை பாஷா சாகிப் தமிழில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கு, அந்நாட்டில் சேருவதற்குப் பூகோள ரீதியில் வாய்ப்பில்லாத சென்னை மாகாணம் உள்ளிட்ட பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களும் ஆதரவு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வி அப்போது காங்கிரஸ் தலைவர்களாலும், தேசிய முஸ்லிம்களாலும் எழுப்பப்பட்டது இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாநாட்டில் வரவேற்புரையாற்றிய பாஷா சாகிப் குறிப்பிட்டதாவது.... ‘நாம் இதை இந்தியாவின் ஒட்டு மொத்தமான முஸ்லிம்களின் நோக்கில் பார்க்கிறோம். இஸ்லாத்தின் பொதுக் கொள்கையில் நம்மை ஐக்கியமாக்கிக் கொள்ளவும், இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கவும் தேவையான எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்’
சமயத் தளத்தில்:
மலங்கு அஹமது பாஷா சாகிப் இஸ்லாத்தின் பால் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். சமயப் பணிகளுக்குத் தாராளமாக நிதிஉதவி செய்து வந்தார். பிற இந்திய மொழிகளில் திருக்குர்ஆனை மொழிபெயர்க்கவும், இஸ்லாமிய நூல்கள் வெளிவரவும் நிதி உதவி செய்தார். வேலூரில் செயல்பட்டு வரும் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கும், உ.பி. மாநிலத்திலுள்ள தேவ்பந்த் மத்ரஸாவுக்கும் தொடர்ந்து நன்கொடை வழங்கினார். தப்லீக் இயக்கத்தின் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை நின்றார். இந்து, கிறிஸ்தவ. பௌத்த சமயங்களின் வேத நூல்களையும், நீதி நூல்களையும் படித்து அச்சமயங்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிந்து வைத்திருந்தார். சமயம் சார்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகின்ற பொழுது, பிற சமயங்களை விட எங்ஙனம் இஸ்லாம் மார்க்கம் உயர்வானது என ஒப்பீடு செய்து பேசுவார். சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் இஸ்லாம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒரு சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.
பண்பு நலன்கள்:
பாஷா சாகிப் மிகச் சிறந்த நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார். தன்னை நாடி வந்தவர்களுக்குச் சாதி, சமய வேறுபாடின்றி உதவி செய்தார். பல ஏழைக் குமர்களின் திருமணம் நடந்தேறிடவும், அவசியத் தேவைகளுக்காக வேறு வழியின்றிக் கடன்வாங்கி அதனைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கும் நிதி உதவி செய்துள்ளார். தினந்தோறும் திருக்குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். விளம்பரத்தையும், ஆடம்பரத்தையும் அவர் விரும்பமாட்டார். மிகப் பெரிய செல்வந்தராக இருந்த போதிலும் எளிய உணவுகளையே உட்கொள்வார். தரையில் தான் படுத்துறங்குவார். சென்னை மாநகராட்சி உறுப்பினராக. சட்டசபை உறுப்பினராகப் பதவி வகித்த போது தன்னை ஒரு சாதாரணச் சேவையாளராகவே காட்டிக் கொண்டார்.
குடும்பம்:
மலங்கு அஹமது பாஷா சாகிப்பிற்கு இரண்டு மகன்கள். நான்கு மகள்கள் என ஆறு மக்கள் இருந்தனர். மூத்த மகன் மலங்க் அப்துல் ரகுமானும் தந்தையார் நடத்தி வந்த ‘மலங்கு டிரேடிங் அன்கோ’ நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். தந்தையைப் போலவே பொதுப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மிகச் சிறந்த புகைப்படக்கலைஞராகவும் அவர் திகழ்ந்தார்.
மலங்கு பாஷா சாகிபின் வாரிசுகள் தற்போது வாணியம்பாடி, சென்னை எனப் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
முடிவுரை:
சில காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் 5.09.1947 அன்று வாணியம்பாடியில் காலமானார். அவரது இறப்பிற்கு மாகாணத்தின் முக்கிய தின, வாரஇதழ்கள் அஞ்சலி செலுத்தியிருந்தன.
3.6.1939 அன்று தொண்டியில் நடைபெற்ற தொண்டி தாலுகா முஸ்லிம்லீக் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்ட பாஷா சாகிப்பிற்கு வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரத்தில் ‘நம் முஸ்லிம் சமூகமானது கல்வி விஷயத்திலும், ராஜ்ஜிய விஷயத்திலும் மிகவும் பிற்போக்கடைந்து, அரசியல், பொருளாதார உரிமைகளை பகைவர்களது வலையில் சிக்கி இழக்கும் தருவாயில் இருக்குங்கால் முஸ்லிம்களின் நிலையை முன்னேற்ற விழைந்து தாங்கள் முன் வந்ததைக் கண்டு எல்லோருள்ளத்திலும் புத்துணர்ச்சி உண்டாகுமென்பது திண்ணம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
31.5.1939 அன்று ஈரோடு மதரஸா இஸ்லாமியா சங்கத்தாரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது கலந்து கொண்ட அவருக்கு ‘அன்புடன் வாசித்தளிக்கப்பட்ட’ நல் வரவேற்புத் தாளில்.. ‘சென்னை சட்ட சபையில் அங்கம் பெற்ற தினம் முதல் பொதுமக்கள் நலங்கருதி தாங்கள் ஆற்றி வரும் சமூக, தேசத் தொண்டானது வருங்காலத்திலும் இன்னும் அதி ஊக்கத்துடன் சேவை புரிவீர்கள் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளதென்பதை எவராலும் மறுக்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை மலங்கு அஹமது பாஷாவின் சேவைக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும். அவரின் வாழ்க்கையில் இன்றையத் தலைமுறையினர் பின்பற்றத்தக்க அளவிற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன என்பது திண்ணம்.
நன்றி:
பாஷா சாகிப் பற்றிய தகவல் அளித்திட்ட வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் அபுல் பஃஸல் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் அபூபக்கர் சித்தீக் ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

நன்றி : சமூகநீதி அறக்கட்டளை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.