Latest News

  

பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரத்தில் திடீர் திருப்பம்: உண்மை நிலை கண்டறியும் குழு அறிக்கை


சென்னை: எலும்புகளை விற்கிறார்கள், முதியோர்களை கடத்துகிறார்கள் என பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு பச்சைக் கொடி காட்டி உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்துள்ளது.

அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும், செயின்ட் ஜோசப் கருணை இல்லம் உரிய அனுமதியோடு செயல்படுவதாகவும் உண்மை கண்டறியும் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுமதியோடுதான் அவ்விடத்தில் கருணை இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் தான், கருணை இல்லத்துக்கான உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்துள்ளனர் என்று 12 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டு பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்ட ஏராளமான முதியோர்களிடமும் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கருணை இல்லத்தில் இருந்த பல முதியவர்கள் எங்கு சென்றார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. கருணை இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சில முதியவர்கள் மீண்டும் அங்கே திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து 323 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், தற்போது 290 பேர்தான் இருக்கிறார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார். மற்ற 33 பேரின் நிலைமை குறித்து எந்த தகவலும் இல்லை. கருணை இல்லத்தில் முதியவர்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால், நிரந்தரமாக ஒரு மருத்துவர் இல்லை. ஒரு முதியவர் இல்லத்தில் இறந்தால், உடனடியாக அவர்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு புதைத்துவிடுகிறார்கள். எந்த மருத்துவரிடமும் ஆலோசனை பெறுவதில்லை என்பது மட்டுமே குறை என்று என்சிஎச்ஆர்ஓவின் நிர்வாகி ஏ. மார்க்ஸ் கூறியுள்ளார்.

பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகளிடம் நாங்கள் பேசும் போது, அவர்களது பணிகளை அங்கீகரித்தனர். அதே சமயம், அந்த கருணை இல்லம் மீது அவ்வப்போது புகார்களை ஏற்படுத்துமாறு தங்களது மேலிடத்தில் இருந்து தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சில தகவல்களை அளித்தனர் என்று ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சத்யா பாபு கூறியுள்ளார்.

உரிய அனுமதி பெற்று, போதிய அடிப்படை வசதிகள் கொண்டிருக்கும் கருணை இல்லம் வழக்கம் போல செயல்படலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முன் அனுமதியோடு செயல்பட்ட போதிலும், அரசு அதிகாரிகள்தான் வேண்டும் என்றே பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு உரிமத்தைப் புதுப்பிக்காமல் இருந்துள்ளனர் என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டதை நேஷனல் அலியன்ஸ் ஆப் பீப்பிள்ஸ் மூவ்மென்ட் அமைப்பைச் சேர்ந்த அருள் நினைவுபடுத்தினார்.

பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சில முதியவர்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் திறந்தவெளியிலேயே போடப்பட்டிருந்தனர். சிலர் சாகும் தருவாயில் இருந்தனர். அவர்களைக் கூட மருத்துவமனை ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் 31 பக்கம் கொண்ட அறிக்கையை உண்மை கண்டறியும் குழுவினர் தமிழக முதல்வரிடம் அளித்துள்ளனர். உண்மை நிலை இவ்வாறிருக்க உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளனர்.

வழக்கின் பின்னணி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்த முதியவர்கள் மீண்டும் அந்த இல்லத்துக்கு வர மறுப்பதாக தெரிவிக்கப்பட்ட அரசுத் தரப்பு விளக்கம் குறித்து விசாரிக்க, சுந்தர் மோகனை வழக்குரைஞர் ஆணையராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குநர் தாமஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி, 'பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை மீண்டும் அதே இல்லத்தில் செவ்வாய்க்கிழமைக்குள் (மார்ச் 27) ஒப்படைக்கவும், 12 முதியவர்கள் இறந்தது குறித்து விளக்கம் அளிக்கவும், காஞ்சிபுரம் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. 

மறுப்பு: இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட சமூகநல அதிகாரி சங்கீதா நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 'வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி கருணை இல்லத்தில் இருந்த 289 முதியவர்களை அழைத்துச் சென்று பல்வேறு இடங்களில் உள்ள 18 இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்கள் மீண்டும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நியமனம்: இதனையடுத்து நீதிபதிகள், அரசு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள அறிக்கை சரியானதுதானா என்பதை ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிய வழக்குரைஞர் ஆணையராக சுந்தர் மேகனை நியமித்தனர். நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்குரைஞர் ஆணையர், செயின்ட் ஜோசப் கருணை இல்ல மேலாளர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ஒரு மனநல மருத்துவரை உடன் அழைத்துச் சென்று பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முதியவர்களின் மனநிலை என்ன என்பது குறித்து அறிந்து, முதியவர்கள் மீண்டும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு திரும்ப விரும்புகின்றனரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், கருணை இல்ல விவகாரம் குறித்து ஆய்வு நடத்திய உண்மை கண்டறியும் குழுவினர் முழு அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.