
சாலை போடாமல் இழுத்தடிக்கும் மதுரை மாநகராட்சி மீது உயர் நீதிமன்ற
கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ''பல நிறுவனங்கள் வரி பாக்கி
வைத்துள்ளதால் மாநகராட்சியில் நிதி இல்லை என்று'' மாநகராட்சி நிர்வாகம்
பதிலளித்தது. ''வரி செலுத்தாத அந்த நிறுவனங்கள் மீது இரண்டு வராத்தில்
நடவடிக்கை எடுக்கவும், குடியிருப்புகள் என்றால் 4 வாரங்களில் சீல்
வையுங்கள்'' என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.
இந்த உத்தரவை எப்படி அமல்படுத்துவதென்று தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம்
குழம்பி நிற்கிறது.
வரி
பாக்கி வைத்திருக்கும் முதல் 100 பேர்கள் கொண்ட பட்டியல் மாநகராட்சி
சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த பட்டியலில் அரசு அலுவலகங்கள், முன்னணி நிறுவனங்கள் பலவும்
இடம்பெற்றுள்ளது கண்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், போலிஸ் கமிஷனர் அலுவலகம், பட்டாலியன்
முகாம், மாவட்ட நீதிமன்றம், தூர்தர்ஷன் என பல முக்கியமான அரசு
அலுவலகங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
கோடிக்கணக்கில்
வரி பாக்கி வைத்திருப்பதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட பட்டியலை
உயர் நீதிமன்றக் கிளைக்கு அனுப்பி வைத்திருக்கும் தகவல் உரிமை சட்ட
ஆர்வலர் நெல்பேட்டை ஹக்கீமிடம் இதுகுறித்து பேசினோம். அவர் நம்மிடம்,
''சாதாரண மக்கள் ஆயிரக்கணக்கில் வரி பாக்கிவைத்திருந்தால், அவர்கள் மீது
உடனே நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். ஆனால்,
அதிக வரி பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் மதுரையிலுள்ள பிரபல கல்வி,
தனியார் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், பல்வேறு
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் செலுத்த வேண்டிய
வரி பாக்கி மட்டும் ரூ.48 கோடியாகும். இதை வசூலித்தாலே மக்களுக்கு
வரிச்சுமையை ஏற்படுத்தாமல் பல திட்டங்களை செயல்படுத்தலாம். நான்
குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மாநகராட்சியே தாமாக முன் வந்து, தகவல்
அறியும் உரிமைச் சட்டம் - 2005 பிரிவு 4 (1) (பி)-ன் அடிப்படையில்
வெளியிட்டு, பொதுமக்களின் பார்வைக்கும் வைத்துள்ளது.
ஆனால்,
உயர் நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டவுடன், அந்த பட்டியலை மாற்றி, வேறு
நபர்களை அந்த பட்டியலில் இடம் பெற வைத்து உயர் நீதிமன்றத்தை அவமதிக்கு
செயலில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. எப்படி மாற்றினாலும், முதலில் வெளியிட்ட
பட்டியலை மறைக்க முடியாது, இதை நாங்கள் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு
கொண்டு செல்வோம்'' என்றார். இந்த விவகாரம் மதுரையைத் தாண்டி தமிழகம்
முழுவதும் பரவிவருவதால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சமூக ஊடகங்களில்
கடுமையாக விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.
No comments:
Post a Comment