சு தந்திர
இந்தியாவின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, தன்னுடைய அழுத்தமான
முத்திரையை இந்தியாவின் மீதும், உலகத்தின் மீதும் விட்டுச்
சென்றிருக்கிறார் என்பதை எப்போதும் உலகம் அங்கீகரிக்க மறந்ததே இல்லை.
இந்தக் கருத்தோடு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஒத்துப்போக மாட்டார்.
நேரு இறந்த போது, நியூயார்க் டைம்ஸ் இதழ், 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று
புகழாரம் சூட்டியது. தி எகனாமிஸ்ட் இதழ், "நேரு இல்லாத உலகம்" என்று
அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது. நேருவிற்கு இந்திய
மக்களைக் கட்டிப்போடும் வசீகரமான கவர்ச்சி இருந்தது என்று அந்தக் கட்டுரை
நினைவுகூர்ந்ததோடு, "இந்த மாமனிதர் இல்லாத உலக அரங்கு களையிழந்து
காட்சியளிக்கும்" என்றது.
நேரு குறித்து இந்தியாவில் நிலவிவந்த பார்வை தற்போது பெருமளவு
மாறியிருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் துதிக்கப்பட்டார். ஆனால், இன்றோ
நேரு பற்றிய தகவல்களையும், அவர் மேற்கொண்ட பணிகளையும் மறக்கடிக்கவும்,
நேருவின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யவும் முயல்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில்
அண்மையில் பிரதமர் மோடி பேசியபோது, "பண்டித நேருவால் இந்தியாவிற்கு
ஜனநாயகம் கிடைத்தது என்று காங்கிரஸ் கட்சி கதை சொன்னாலும், அது
உண்மையில்லை" என்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்புப் பாடப்
புத்தகங்களிலிருந்து நேருவின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. தேசிய
ஆவணக்காப்பகம் நடத்திய 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' குறித்த கண்காட்சியில்
நேருவின் பெயர் இடம்பெறவில்லை. மத்திய கலாசார அமைச்சகம், நேரு நினைவு
அருங்காட்சியகம், நேருவின் அதிகாரபூர்வ வீட்டில் உள்ள நூலகம் ஆகியவற்றை
"அனைத்து பிரதமர்களின் வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டும் வளாகம்" என
மாற்ற முடிவு எடுத்திருக்கிறது. "அனைத்து பிரதமர்களும் சமமான
முக்கியத்துவம் கொண்டவர்கள்" என்பதே இதன்மூலம் சொல்லப்படும் செய்தி.
ஆபிரகாம் லிங்கன் நினைவகத்தில் மற்ற அமெரிக்கத் தலைவர்களின் சிலைகளை
வைத்தால் எத்தனை கேலிக்கூத்தாக இருக்குமோ, அப்படித்தான் இதுவும் உள்ளது.
இப்படி
நேருவைக் குறிவைத்து மத்திய அரசு தாக்குவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
மகாத்மா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நேரு தடை
செய்ததற்காகவே அவரை வெறுக்கிறது. மேலும், 'இந்திய அரசு பின்பற்ற வேண்டிய
மதச்சார்பின்மை' என நேரு வகுத்துக் கொடுத்துவிட்டுச் சென்ற பாதையை
ஆர்.எஸ்.எஸ். கடுமையாக நிராகரிக்கிறது. 1962-ம் ஆண்டு நடைபெற்ற சீனப்போரில்
இந்தியா அடைந்த அவமானகரமான தோல்வியை நினைவுபடுத்தி, நேருவுக்கு எதிராகப்
பொதுமக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற முடிகிறது. வெளியுறவுக் கொள்கையில்
நேரு பின்பற்றிய அணிசேரா கொள்கை, மையப்படுத்தப்பட்ட அரசின் திட்டமிடல்
ஆகியவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. பொதுவாழ்வில் அவருக்குத் தரப்படும்
முக்கியத்துவமும் பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்து இருக்கிறது. காங்கிரஸ்
கட்சி அவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு, சிலைகள் நிறுவுவது, சாலைகளுக்கும்,
அரசுத் திட்டங்களுக்கும் நேருவின் பெயரை வைப்பது, அவரின் முகம் தாங்கிய
விளம்பரங்களை வெளியிடுவது என்று செயல்படுவதும் இந்த எதிர்ப்புக்குக்
காரணம். இப்படி நேரு நீக்கமற நிறைந்திருப்பதால், ஏன் அவர் மகத்தான தலைவர்
என்பது கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.
நேரு உருவாகிறார்:
நேருவின்
வாழ்க்கையை நினைவுகூர்வது முக்கியமானது. அதன்மூலம், அவரின் வாழ்நாளில்
இந்தியாவிற்கு எப்படியெல்லாம் உழைத்தார் என்றும், இப்போதும் நேரு ஏன்
தேவைப்படுகிறார் என்றும் உணர முடியும். நேருவைப் பற்றிப் பல்வேறு வாழ்க்கை
வரலாறுகள் வந்திருக்க வேண்டும். பின் ஏன் சொற்பமான வாழ்க்கை வரலாறுகளே
எழுதப்பட்டிருக்கின்றன? புத்தகங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட கடிதங்கள்
என்று நேரு எழுதி குவித்தவற்றையும், மேடைகளில் பேசியவற்றையும் தொகுத்துப்
பார்த்தால் மலைப்பே ஏற்படும். அந்தவகையில் வரலாற்று ஆசிரியர் ஜூடித்
பிரவுன் 2003-ல் எழுதிய வாழ்க்கை வரலாறான 'Nehru: A Political Life' மிக
முக்கியமான, சிறப்புமிக்க நூலாகத் திகழ்கிறது. அது நேருவின் வாழ்க்கையை
உணர்ந்துகொள்ள மிகவும் உதவிகரமான படைப்பாக உள்ளது. ஏற்கெனவே இருக்கும்
தரவுகளோடு, விடுதலைக்குப் பிந்தைய காலத்தைய நேருவின் ஆவணங்கள்,
நூலாசிரியருக்கு சோனியா காந்தியால் தரப்பட்டன. இவற்றைக்கொண்டு அவர்
நேருவின் பொதுவாழ்வு குறித்த சுவையான, நடுநிலையான மதிப்பீட்டைத் தருகிறார்.
செல்வச்செழிப்பான
குடும்பத்தில் நேரு பிறந்தார். அவரின் தந்தை மோதிலால் நேரு வளம் மிகுந்த
வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். ஜூடித் பிரவுனின்
வரிகளில் சொல்வது என்றால், 'நேரு வளர்ந்த காலத்தில், காலனிய ஆட்சி,
இந்தியாவின் மத, சமூக மரபுகளுக்குச் சவால் விட்டது. அதேசமயம், படித்த
இந்தியர்களுக்குக் காலனிய ஆட்சிப் பொருளாதார, அரசியல் வாய்ப்புகளை
வழங்கியது' என்று குறிப்பிடுகிறார். ஹாரோவிலும், கேம்பிரிட்ஜிலும் பெற்ற
கல்வி நேருவின் அரசியல் பார்வையைச் செதுக்கியது. ஆங்கிலேய
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீவிரமான அருவருப்பை நேரு வளர்த்துக்கொண்டார்.
இந்தியாவிற்குத் திரும்பி சில ஆண்டுகள் இலக்கற்று இருந்த நேரு, மகாத்மா
காந்தியாலும், 1919-20 காலத்தில் நடைபெற்ற போராட்டங்களாலும்
ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கத்தில் மிதவாதிகள், தீவிரப்போக்குக்
கொண்டவர்கள் இடையே செயல்திட்டங்கள், அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும்
என்று விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒத்துழையாமையை
நடைமுறைப்படுத்துவது குறித்தும், முழுமையான விடுதலைக்காகப் போராடுவதா,
இல்லை படிப்படியாகப் போராட்டங்களை முன்னெடுப்பதில் மட்டும்
திருப்திப்பட்டுக் கொள்வதா என்று அந்த விவாதங்கள் நீண்டன.
இவ்வாறு
பிளவுபட்டுக் கிடந்த அரசியல் சூழலில், காந்தியின் பக்கம் நின்றார் நேரு.
இந்தியாவின் விடுதலையை நோக்கிய பெரும் பயணத்தின் மையமாக அவர் காந்தியையே
கருதினார். மகாத்மாவின் அரசியல் அணுகுமுறைகள், அறரீதியான மாற்றங்களுக்குக்
காந்தி கொடுத்த முக்கியத்துவம் ஆகியவை நேருவை அடிக்கடி கடுப்பேற்றின.
நேருவின் பார்வையை மற்ற காரணிகளும் கட்டமைத்தன. அவர் இந்து - இஸ்லாமிய
கலாசாரச் சங்கமத்தில் வளர்ந்தார். அவரின் அப்பா மோதிலால் ஆரம்பக் கல்வியை
இஸ்லாமிய ஆசிரியரிடமே பெற்றார். அவரிடம் அரேபிய மொழி, பாரசீகம் ஆகியவற்றைக்
கற்றுத்தேர்ந்தார் மோதிலால். நேருவின் குடும்பம் அலகாபாத்தில் வாழ்ந்த
காஷ்மீர் குடும்பம் என்பதால் உள்ளூர் மக்களில் ஒருவராக அவர்கள்
கருதப்படவில்லை. அவர்கள் குறுகிய, பிராந்திய உணர்வுகளுக்கு இரையாகவில்லை.
நேருவும் சில புள்ளிகளில் தொடர்ந்து வெளியாளாகவே உணர்ந்தார். தீவிரமான
தேசியவாதியாகத் திகழ்ந்த நேரு, பிரிட்டனின் கலாசாரத்தை நேசித்தார்.
அந்நியர் ஆட்சியில் இந்தியா அல்லல்படுவதைக் கண்டு பெருந்துயர் கொண்டார்
என்றாலும், இந்தியாவில் நிலவி வந்த நம்பிக்கைகள், சடங்குகளை அவர்
நிராகரித்தார்.
வெகுவிரைவிலேயே நேரு அரசியலிலும், காங்கிரஸ்
கட்சியின் விஷயங்களிலும் தன்னைப் பிணைத்துக்கொண்டார். அவர் எக்கச்சக்கமாக
வாசித்தார். அவர் சிறையில் பல காலம் இருந்ததும் அதற்குப் பெருமளவில்
உதவியது. 1921 முதல் 1945 வரையிலான காலத்தில் நேரு ஒன்பது முறை சிறையில்
அடைக்கப்பட்டார். சிறைவாசங்கள் 12 நாள்களிலிருந்து 1,041 நாள்கள் வரை
நீண்டன. ஒட்டுமொத்தமாக 3,259 நாள்கள், அதாவது கிட்டத்தட்ட தன் வாழ்க்கையின்
ஒன்பது ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். சிறை வாழ்க்கைக்கு நேரு மிகவும்
பழகிக்கொண்டார். அங்கே அவர் ஏற்படுத்திக்கொண்ட நண்பர்கள், பொழுதுபோக்குகள்
குறித்தும், தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லாமல் போனது குறித்து
எரிச்சலடைந்ததையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ஜூடித் பிரவுன்,
"நேருவுக்கு மிகப்பெரிய ஆறுதல் வாசிப்பிலேயே கிடைத்தது" என்கிறார்.
பொருளாதாரம், இலக்கியம், அன்றாட நிகழ்வுகள் குறித்து நேரு படித்தார்.
"ஓயாமல் வாசிப்பது சிறைவாழ்க்கையில் அவசியமாகி விடுகிறது. இல்லையென்றால்
மூளை தேங்கிப்போய் அழுகி விடுகிறது" என்று நேரு பேசினார். பிப்ரவரி 1934
முதல் செப்டம்பர் 1935-க்கு இடைப்பட்ட காலத்திற்குள் மட்டும் 188
புத்தகங்களை (மாதத்திற்குச் சராசரியாக 15-20 நூல்கள்) வாசித்து முடித்தார்.
இந்தத் தீராத வாசிப்பு நேருவின், அபாரமான எழுத்து நடைக்கு
வித்திட்டது என்பதில் ஐயமில்லை. இது அவரின் சுயசரிதை, 'கண்டடைந்த இந்தியா'
முதலிய நூல்களிலும், ஆழமாக உலுக்கும் அவரின் கடிதங்களிலும் வெளிப்படுகிறது.
அவர் இந்தியா மற்றும் பிரிட்டனிலிருந்த காலத்திலும், ஐரோப்பாவில்
மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் பல நாடுகளின் தலைவர்களோடு மேற்கொண்ட
உரையாடல்களாலும் அவருக்கு மிகப்பெரும் தெளிவு கிடைக்கப்பெற்றது. இவற்றால்
காலனிய ஆட்சிக்கு எதிரான தீவிரமான பார்வை, நாட்டிற்குள்ளும், நாடுகளுக்கு
இடையேயும் சமத்துவம், நில சீர்திருத்தத்திற்கான தேவை, பொருளாதாரம்,
சமூகத்தில் அரசின் தலையீட்டின் அவசியம், நாட்டின் முன்னேற்றத்தில்
அறிவியலின் இடம் (அவர் நம்பிக்கையைத் தீவிரமாக எதிர்த்ததோடு, அதனை
நிராகரித்தார்), தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு, உலக
அரங்கில் இந்தியாவின் இடம் ஆகியன குறித்த தீவிரமான பார்வைகளை நேரு
பெற்றார்.
இப்படிப்பட்ட
நேருவின் அறிவு முதிர்ச்சி இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது.
முப்பதுகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் நேரு, . இந்தக் காலத்தில்
தேசிய இயக்கம், போராட்டம், சமரசம், உள்கட்சி பிளவுகள், தேக்கநிலை எனப் பல
கட்டங்களைக் கடந்தது. இந்தப் பத்தாண்டுகளில் காந்தி "தீவிரமான அரசியல்
தலைவராக" இருக்கவில்லை. அவர் தீண்டப்படாத மக்களின் வாழ்க்கை
மேம்பாட்டிற்காகத் தன்னுடைய ஆற்றலை செலவிட்டார். 1936-ம் ஆண்டுவாக்கில்
காந்தி பொதுவெளியில், "நேருவே தன்னுடைய வாரிசு என்றும், நேருவுக்குப்
பல்வேறு வரங்கள் உள்ளன. அவர் எந்தவகையான தனிப்பட்ட நலன்களுக்கோ, சில
குழுக்களின் முன்னேற்றத்திற்கோ தன்னை ஒப்புக்கொடுக்காமல் ஒட்டுமொத்த
இந்தியாவிற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். அவரே காங்கிரஸ் கட்சியில்
ஒற்றுமையைச் சாதிக்க முடியும்" என்று பேசினார். கட்சியில் மட்டுமல்லாமல்,
பொதுமக்களின் வழிபாட்டிற்கு உரிய தலைவராக, மக்கள் கூட்டத்தைக் கவர்ந்து
இழுக்கும் மக்கள் நாயகனாக காந்தி மாறியிருந்தார்.
இந்தியாவில்
இடைக்கால அரசிற்கு 1946-ல் நேரு தலைமையேற்றார் என்பதும், பிரிவினை, விடுதலை
சார்ந்த பேச்சுவார்த்தைகளில் மவுண்ட் பேட்டன், ஜின்னாவோடு கலந்துகொண்டார்
என்பதும் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். காந்திக்கு முன்னரே
முழுமையான விடுதலைக்குக் குரல் கொடுத்த நேரு, அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு
முன்பு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்கிற மவுன்ட்
பேட்டனின் பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்தார். அது இந்தியாவைத் துண்டு,
துண்டாகச் சிதறடித்து விடும் என்று நேரு கவலைப்பட்டார். மவுன்ட் பேட்டன்
வழிக்கு வந்தார். எனினும், விடுதலைக்குப் பிறகு நேருவும், அவரின்
சகாக்களும் விடுதலைக்கு முந்தைய சில வாரங்களில் மிகப்பெரிய, அசாதாரணமான
சவால்களை எதிர்கொண்டார்கள். ஜூடித் பிரவுன் எழுதுவதைப் போல, மதவாத வன்முறை
காட்டுத் தீ போலப் பரவிக்கொண்டிருந்தது, மாகாணங்கள் இந்தியாவா, பாகிஸ்தானா
என்று சிந்தித்துக்கொண்டிருந்தன, இந்திய சமஸ்தானங்களின் இளவரசர்களின்
எதிர்காலம், பிரிட்டிஷ் இந்தியாவின் சொத்துகளை எப்படிப் பங்கிட்டுக்
கொள்வது என்று இந்தச் சவால்கள் நீண்டன. விடுதலைக்குப் பிறகு காஷ்மீர்
சிக்கலையும், விடுதலைக்கு ஆறு மாதங்கள் கழித்துக் காந்தியின் படுகொலையையும்
நேரு எதிர்கொள்ள வேண்டி வந்தது.
நேருவின் மகத்தான மூன்று சாதனைகள்:
நேருவை
மென்மேலும் மெச்சுவதற்கான காரணங்கள், 1946-க்குப் பிந்தைய அவரின்
பொதுவாழ்க்கையில் பொதிந்திருக்கிறது. இக்காலகட்டத்தில் அவர் செய்த மூன்று
முக்கியமான தலையீடுகள், இந்தியக் குடியரசை செதுக்கியது.
முதலாவதாக,
இந்தியா குறித்த அவரின் கனவை அரசியலமைப்புச் சட்டத்தில் பொறித்தார்.
அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில், அரசியலமைப்பின் குறிக்கோள்களை
முன்மொழியும் தீர்மானத்தை அவரே உருவாக்கி, அவையில் தாக்கல் செய்தார். அது
இந்தியாவை விடுதலைக் குடியரசாக அறிவித்ததோடு, தனக்கான அதிகாரத்தை இந்தியா
தன்னுடைய மக்களிடமிருந்தே பெறுகிறது என்று அறிவித்தது. அனைவருக்கும்,
"சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைப்பதையும்; சம அந்தஸ்து, வாய்ப்புகளை
உறுதி செய்வதையும்; சிந்திக்கவும், விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், ஒன்று
கூடுவதற்குமான உரிமைகளையும்" அது வழங்கியது. சிறுபான்மையினர்,
பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பகுதிகளுக்குப் பாதுகாப்பும்
அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டது. இவையனைத்தும் அதற்கு முன்புவரை
தரப்படவில்லை. 1937-ம் ஆண்டு தேர்தலில் சொத்துரிமையைக் கொண்டு
வாக்களிக்கும் உரிமை மூன்று கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தரப்பட்டது.
ஆனால், விடுதலை இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் 17.3 கோடி
இந்தியர்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது. வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர
குஹா, தன்னுடைய 'Patriots and Partisans' என்னும் நூலில் "நேருவே நம்முடைய
ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பிய தலைமைச் சிற்பி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வேறெந்த தேசியவாதியை விடவும் அவர் அனைவருக்கும் வாக்குரிமையையும், பல
கட்சித் தேர்தல் முறையையும் வளர்த்தெடுத்தார்" என்று எழுதுகிறார்.
ஜூடித்
பிரவுன் தன்னுடைய நூலில், "பல நூற்றாண்டுகளாக இந்தியாவில்
நிறைந்திருக்கும் பல்வேறு மத, கலாசாரப் பாரம்பர்யங்களை உள்வாங்கிய,
ஏற்றுக்கொண்ட பண்பாட்டிலிருந்து பிறந்த பன்மைத்துவம் மிக்க இந்தியாவே நேரு
கனவு கண்ட இந்தியாவாகும். இது அனைவருக்குமான இந்தியா என்கிற மன உறுதியே
நேரு கனவு கண்ட இந்தியாவின் ஆன்மாவாக இருந்தது" என்று எழுதுகிறார். இந்தப்
பின்புலத்தில்தான் விடுதலை இந்தியாவில் நேருசெயல்பட்டார். சுதேச
சமஸ்தானங்களும், பல்வேறு சமூகங்களும் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை வேறு
திசைகளில் செலுத்த முயன்றபோது அனைவருக்குமான இந்தியா என்கிற கனவோடு நேரு
முனைப்பாக இயங்கினார். இந்தியக் குடியரசில் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை
உறுதி செய்வது, மதச்சார்பின்மை, சமூகச் சமத்துவமின்மை மற்றும்
பாகுபாடுகளைச் சரி செய்யும் அரசாங்கத்தின் கொள்கை ஆகியவற்றின் மூலமே ஒன்றாக
வைத்திருக்க முடியும் என்று நேரு புரிந்துகொண்டார். பல்வேறு அடையாளங்கள்
கொண்ட நாட்டிற்கு அரசியலமைப்பின் அடிப்படையிலான ஜனநாயகத்தின் தேவையை நேரு
உணர்ந்திருந்தார். அவருக்கு உறுதுணையாக மகத்தான தலைவர்களான டாக்டர்
அம்பேத்கர், வல்லபாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி ஆகியோர்
இருந்தது இந்தியாவின் பெரும்பேறு. இவர்கள் இணைந்து அனைத்து இந்தியர்களும்
ஒன்று சேர்ந்திருக்கக் கூடிய அரசியல் அடித்தளத்தை அமைத்தார்கள். தனிப்பட்ட
அடையாளங்களைக் காத்துக்கொண்டே அனைவருக்கும் உரிய தேசம் என்கிற கனவை
கட்டியெழுப்பினார்கள்.
உலக அரசியலில் நேருவின் தாக்கமும் பரவலாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர் இனவெறி, ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிரான
தீவிரமான, வலிமையான குரலாக உருவெடுத்தார். ஆசிய ஒற்றுமை,
ஆப்பிரிக்க-ஆசியக் கூட்டுறவு, உலக அமைதி ஆகியவற்றைத் தொடர்ந்து
வலியுறுத்தினார். அவர் உருவாக்கிய அணி சேராக் கொள்கையால் இந்தியா
பனிப்போரில் சிக்கிக்கொள்ளாமல், இரு தரப்பிலும் உறவுகளை வளர்த்துக்கொண்டு
பலன்பெற்றது. ராமச்சந்திர குஹா சுட்டிக்காட்டுவதைப் போல, "அது இந்தியா
பல்வேறு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கிற நாடாக மாற உதவியது.
வளரும் நாடுகளின் தலைவராகவும் இந்தியாவை மாற்றியது".
நேருவின்
வெளியுறவுக்கொள்கை, ஜூடித் பிரவுன் சுட்டிக்காட்டுவதைப் போல,
"இந்தியாவிற்கென்று தனித்த, சுயமான சர்வதேச அடையாளத்தை" உருவாக்கியது.
மூன்றாவதாக,
உள்நாட்டின் சமூக மாற்றத்தில் நேரு தீவிர கவனம் செலுத்தினார்.
"மையப்படுத்தப்பட்ட திட்டமிடலே வளர்ச்சியை வேகப்படுத்தும்; அதுவே
சமத்துவமின்மையை எதிர்த்து வென்றிட உதவும்" என்று நம்பினார். இப்படிப்பட்ட
சோசியலிஸ அடிப்படையிலான ஆட்சிமுறையும், கலப்புப் பொருளாதாரமும் சமீப
காலங்களில் தீவிரமான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. அவை புத்தாக்கம்,
வளர்ச்சியை முடக்கின என்கிற நியாயமான விமர்சனமாக வைக்கப்படுகிறது. ஆனால்,
நேரு காலத்தில் அதற்குப் பெருமளவில் ஆதரவு இருந்தது. தொழிலதிபர்கள்
அந்நியப் போட்டியிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என்றார்கள். தலைவர்களை,
அவர்களின் காலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். ஜூடித் பிரவுன்
சொல்வதைப் போல, ''இந்தியா எங்கிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது
என்பதைக் கவனிக்க வேண்டும். விடுதலையின்போது கல்வியறிவு உள்ளோர் விகிதம்
வெறும் 14% மட்டுமே. வறுமையால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக
அதிகமாக இருந்தது. பல்வேறு துறைகளில் அரசின் தலையீடு தேவைப்பட்டது. அது பல
தருணங்களில் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தியது. அணுசக்தி, விண்வெளித்துறை
முதலியவை சில எடுத்துக்காட்டுகள்".
நேருவின் பிழைகளும், தோல்விகளும் என்ன?
நேருவின்
தோல்விகளும் ஏராளம் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் சீனாவின் நோக்கங்களை
முற்றிலும் தவறாகக் கணித்தார். இந்தியாவிற்கு எதிராக மாவோ தாக்குதல்
நடத்துவார் என்று நேரு எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னமும் மோசமாக, 'சீனா
ஒன்றும் செய்யாது' என்கிற நேருவின் முன்முடிவு ராணுவ ரீதியாக இந்தியா
போருக்குத் தயாராக இல்லாமல் போக முக்கியக் காரணமாக அமைந்தது. தன்னுடைய
நண்பரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான கிருஷ்ண மேனனை அளவுக்கு அதிகமாக
நம்பினார் நேரு. தன்னுடைய பொறுப்புகளை மற்றவர்களுக்கு நேரு, பகுத்துத்
தராமல் போனதால், நல்ல அரசியல் தலைவர்கள் உருவாவது பெருமளவு தடைப்பட்டது.
இது இந்தியாவிற்குப் பல வகைகளில் பேரிழப்பானது. அவர் நில சீர்திருத்தங்கள்
முதலிய பல்வேறு மாற்றங்களை இந்தியாவில் முன்னெடுக்கக் கனவு கண்டார். நில
சீர்திருத்த முயற்சிகள், கிராமங்களில் செல்வாக்கோடு திகழ்ந்த
நிலச்சுவான்தார்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த காங்கிரஸ் மாநிலத்
தலைவர்களால் பிசுபிசுத்தன. ராமச்சந்திர குஹா குறிப்பிடுவதைப் போல,
வலதுசாரிகள் 'அதிகாரங்களைத் தன்னிடமே குவித்து வைத்து கொள்பவராக நேரு
திகழ்ந்தார்' என்று எண்ணினார்கள். இடதுசாரிகளோ 'நேரு போதுமான அளவு
மாற்றங்களை முன்னெடுக்கவில்லை' என்று கருதினார்கள். அவர் தொடங்கிய பெரிய
அணைத்திட்டங்கள், பூர்வகுடிகளை நடுத்தெருவில் நிற்க வைத்தன. ஷேக்
அப்துல்லாவை பல ஆண்டுகளாகச் சிறையில் நேரு அடைத்து வைத்ததிலிருந்தே
இந்தியாவிடமிருந்து காஷ்மீர்அந்நியப்படுவது ஆரம்பமானது. நேரு பல
தருணங்களில் தனக்கும், தன் நாட்டின் குடிமக்களுக்கும் ஒத்துப்போகவில்லை
என்று கண்டுகொண்டார். நிர்வாகத் திறமையின்மை, மதவாத அரசியல், காங்கிரஸ்
கட்சியில் நிலவிய நேர்மையின்மை, குறுகிய மாநிலரீதியான, சாதிய பார்வைகள்
ஆகியவை இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குத் தடையாக இருந்தது போன்றவை நேருவை
பெருமளவில் விரக்திகொள்ள வைத்தன.
நேருவின்
சாதனைகள் அவரின் சறுக்கல்களை விடப் பல மடங்கு பெரியவை. எழுத்தாளர் நீரத்
சவுத்ரி, 'இந்தியாவின் ஒற்றுமைக்குக் காரணமான மிக முக்கியமான அறசக்தி
நேருவின் தலைமையே ஆகும்' என்று சிலிர்த்தார். மேலும், 'நேருவின்
வாரிசாகக்கூடிய தலைவர் ஒருவருமில்லை. அவரின் ஈடிணையற்ற தலைமைப் பண்பின்
வெவ்வேறு கூறுகளுக்குத் தனித்தனி வாரிசுகள் வேண்டுமானால் உருவாகலாம்' என்று
எழுதினார். இது நேரு எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தியவராக இருந்தார்
என்பதற்குக் கட்டியம் கூறுகிறது.
காந்தியை ஒரு துறவியைப் போல
இந்தியா புரிந்துவைத்திருக்கிறது. அவருக்கு எந்தவகையிலும் சளைக்காத,
இந்தியாவின் வழிகாட்டியாக நேரு திகழ்ந்தார். தொடர்ந்து இந்தியாவின்
அரசியலும், சமூகமும் செல்ல வேண்டிய திசையும், விடாமல் பற்றிக்கொள்ள வேண்டிய
கொள்கைகள் குறித்தும் அவர் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். அவர்
உசுப்பேற்றினார், மென்மையாக இடித்துரைத்தார், விமர்சித்தார். அவர்
தோற்கவும் செய்தார். தன்னுடைய பொது வாழ்க்கையில் ஆவி உருக உழைத்து அவர்
அயர்ந்து போன தருணங்கள் பல உண்டு. ராமச்சந்திர குஹா, நேரு காலத்தில்
இந்தியாவில் பணியாற்றிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரியான வால்டர்
கிராக்கரின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார், "நேரு தங்களுக்கு உதவவே ஓயாமல்
உழைக்கிறார், தனக்கு என்று அவர் எதற்கும் ஆசைப்படவில்லை என்று பெரும்பான்மை
மக்கள் உணர்ந்திருந்தார்கள்".
நேரு தன்னுடைய முழு வாழ்க்கையையும்
இந்தியாவிற்காக அர்ப்பணித்தார். நேருவின் பங்களிப்போ, தாக்கமோ இல்லாத
இந்திய குடியரசின் அமைப்போ, அம்சமோ எதுவுமில்லை என்று உறுதியாகச்
சொல்லலாம். அவரைக் கொண்டாடவும், விமர்சிக்கவும் ஆயிரம் உண்டு. அவரைத்
தூற்றுவதோ, இன்னமும் மோசமாக, மறக்கடிக்க முயல்வதோ, வரலாற்றில் நேருவின்
இடத்தை எந்த வகையிலும் மாற்றாது. மாறாக, இப்படிப்பட்ட முயற்சிகள்
சீரழிந்துகொண்டிருக்கும் இந்தியாவின் மோசமான நிலைமையை மூடி மறைப்பதற்கான
முயற்சிகளே ஆகும்.
நன்றி: The Wire தமிழில்: மோ.தருண்

No comments:
Post a Comment