
பி. ஜே.பி.
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்து, நான்காண்டுகள் நிறைவடைய
இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும்
சூழ்நிலையில், இப்போதே நாடு முழுவதும் தேர்தலுக்கான ஃபீவர், பல
மாநிலங்களில் தொற்றிக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.
நாடாளுமன்றத்தில்
பிப்ரவரி முதல் தேதியன்று, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த,
2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக்
குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்
கருத்துத் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புதிய கட்டண உயர்வையும்
அறிவிக்காமலும், வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாமலும் விவசாயம் மற்றும்
கிராமப்புறங்களின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டும் பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில்
பி.ஜே.பி. தோல்வியடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகப்
பார்க்கப்படுகிறது.
இதெல்லாம்
ஒருபுறமிருக்க, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில்
இடம்பெற்றிருந்த கட்சிகள், பி.ஜே.பி-யுடன் இணைந்து மீண்டும் தேர்தலைச்
சந்திக்குமா என்ற ஐயம் இப்போதே எழத்தொடங்கியுள்ளது. பி.ஜே.பி-யுடன்
முக்கியக் கூட்டணிக் கட்சிகளான தற்போதுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம்
மற்றும் தெலுங்குதேசம் ஆகியவற்றில், சிவசேனா தனித்துப் போட்டியிடப்போவதாக
ஏற்கெனவே அறிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய
ஜனதா தளத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-யுடன் இணக்கமான போக்கைக்
கொண்டிருந்தாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலைப் போன்ற தொகுதிப்பங்கீடு
என்று பி.ஜே.பி. தரப்பில் வலியுறுத்தப்பட்டால், அவர் கூட்டணியை விட்டு
வெளியேற வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், ஐக்கிய ஜனதா தளம் தனித்துப்
போட்டியிடும். மகாராஷ்டிராவிலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
போன்ற கட்சிகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ
போட்டியிடும்பட்சத்தில், பி.ஜே.பி-க்கு வலுவான எதிர்ப்பு இருக்கும் என்று
எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு,
அம்மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதால், பி.ஜே.பி. தனித்துப்
போட்டியிடுமா என்பது இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம்
புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி
ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு
நாயுடு, மத்திய பி.ஜே.பி. அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.
இதனால், தெலுங்கு தேசம் கட்சி அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்
தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்தோ அல்லது
பி.ஜே.பி. அல்லாத கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட முடிவுசெய்யும் என்று
பரவலாக இப்போதே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதற்கு ஏதுவாக
தெலுங்குதேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள், சந்திரபாபு நாயுடுவிடம்
பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர். பி.ஜே.பி.
கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து முடிவெடுப்பதற்காக தெலுங்குதேசம்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை விஜயவாடாவில்
நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் பி.ஜே.பி-யின்
மிகப்பெரிய கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயகக்
கூட்டணியிலிருந்து ஒருவேளை வெளியேறுமானால் அது பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய
பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின்
எதிர்காலச் செயல்பாடுகள் பற்றி சந்திரபாபு நாயுடு, கட்சியின் முக்கிய
நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை நீண்டநெடிய ஆலோசனை நடத்தினார். அவர்களின்
கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய தெலுங்குதேசம்
கட்சியின் நிர்வாகிகள் அனைவருமே, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேற
வேண்டும் என்றும், கூட்டணியில் தொடர்வதால், ஆந்திர மாநில மக்களுக்கும்,
கட்சித் தொண்டர்களுக்கும் தெலுங்குதேசம் கட்சிமீது தவறான பிரசாரம்
உருவாகும் என்றும் தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு, தெலுங்குதேசம் கட்சியையும், ஆந்திர மாநிலத்தையும் தொடர்ந்து
புறக்கணித்து வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும்
சந்திரபாபு நாயுடுவிடம் எடுத்துக்கூறியதாகத் தெரிகிறது.
மத்திய
அமைச்சரவையிலிருந்து தெலுங்குதேசம் விலகுவது, கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது மற்றும் தேசிய
ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது போன்றவை குறித்து சந்திரபாபு
நாயுடு ஆலோசனை நடத்தியதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜி.
வெங்கடேஷ் தெரிவித்தார். எப்படியிருப்பினும் பி.ஜே.பி-க்கு எதிராகப்
போர்க்கொடி தூக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்குக் காரணமாக
தெலுங்குதேசம் எம்.பி-க்கள் கூறுவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்
தங்களுக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படுவதில்லை. ஆர்.எஸ்.எஸ்.
கருத்துகளையே பி.ஜே.பி. மதிக்கிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின்
கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து
நீடிக்கிறது.
சந்திரபாபு
நாயுடு எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், அதற்கு நாங்கள் தயாராக
இருக்கிறோம். கூட்டணியை விட்டு வெளியேறுவது என்று சந்திரபாபு
அறிவித்தவுடன், பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளோம் என்று
தெலுங்குதேசம் எம்.பி. ஒருவர் கூறினார்.
தெலுங்குதேசம் கட்சிக்கு
நெருக்கடி கொடுப்பதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் பி.ஜே.பி வளர்ச்சியடைய
முயற்சி செய்கிறது. அதுபோன்ற சூழலை ஏற்படுத்துமானால், காங்கிரஸ் கட்சிக்கு
என்ன நேர்ந்ததோ, அதே நிலைதான் பி.ஜே.பி-க்கும் ஏற்படும் என்றார் அவர்.
தெலுங்குதேசம்
வெளியேறவிருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ஜெகன்மோகன் ரெட்டி
தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள,
பி.ஜே.பி. மறைமுக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெலுங்குதேசம் கட்சி
கருதுவதே அந்தக் காரணம் ஆகும். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப்
பேட்டியளித்த ஜெகன்மோகன் ரெட்டி, பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க தங்கள்
கட்சி தயங்காது என்று கூறியிருந்தார்.
ஆந்திர மாநிலத்தில் மேற்கொள்ள
வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, ஏற்கெனவே தான் அளித்திருந்த மனுமீது பிரதமர்
மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் சந்திரபாபு
நாயுடுவுக்கு உள்ளது. இதை, கடந்த மாதம் பிரதமரைச் சந்தித்தபோது, அவர்
முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மோடி அதைப்பற்றி பெரிதாக
எடுத்துக்கொள்ளவில்லை என்ற வருத்தமும் சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ளதாக
தெலுங்குதேச முன்னணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கட்சிக்
கூட்டணியில் இருக்க வேண்டாம் என்று பி.ஜே.பி. கருதுமானால், நாங்கள்
வெளியேறத் தயார் என்று விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு அறிவித்ததே அதன்
முன்னோட்டம்தான்.
இந்தச் சூழ்நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை
தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.-க்கள் கூட்டத்திற்கு சந்திரபாபு அழைப்பு
விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறும்
முடிவை உறுதியாக அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்,
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் சேர்த்தே
தேர்தல் நடைபெறும் நிலையில், இப்போதே நிலைப்பாட்டை அறிவித்தால் மட்டுமே
எதிர்காலத்தில் மாநிலத்திலும், நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற
முடியும் என்று நாயுடு திடமாக நம்புகிறார்.
தெலுங்குதேசம்
கட்சியின் தீவிர நிலைப்பாடு பற்றி பி.ஜே.பி. தரப்பில், அக்கட்சியின்
செய்தித்தொடர்பாளர்களைக் கேட்டபோது, அவர்கள் கருத்து எதையும்
தெரிவிக்கவில்லை.
சிவசேனா, தெலுங்குதேசத்தை தொடர்ந்து மேலும் பல
கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக அதிருப்தியில் இருப்பதால் 2019
நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு இப்போதே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விரைவில்
சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல்களில் பி.ஜே.பி. அவ்வளவு
எளிதாக வெற்றிபெற முடியாத நிலை இப்போதே உருவாகி வருகிறது.
பல்வேறு
மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்
பி.ஜே.பி. எந்தமாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவிர, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்,
தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியுள்ள நிலையில்,
இங்கும் பி.ஜே.பி-யால் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடியுமா என்ற
கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் பி.ஜே.பி-க்கு இக்கட்டான பல நிகழ்வுகளைத்
தரக்கூடிய வகையிலேயே அடுத்து வரும் இரண்டாண்டுகள் இருக்கும் என்பதில்
ஐயமில்லை...!
No comments:
Post a Comment