
மதுரை எல்லீஸ் நகர் போக்குவரத்து பணிமனையில் பேருந்தை இயக்க முயன்றதாக
அரசுப் பேருந்து ஓட்டுநரை சக ஊழியர்களே தாக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
ஊதிய
உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை
பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு,
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிடில், பணி நீக்கம், நீதிமன்ற
அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை
விடுத்துள்ளது. ஆனால், தொழிலாளர்கள் பிரச்னை முடியும்வரை போராட்டம் தொடரும்
என்றும், நீதிமன்ற உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும்
தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அவர்கள் போராட்டம் 3-வது நாளாக இன்றும்
தொடர்ந்து நடந்துவருகிறது.
இதனால், தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும்
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு பேருந்துகள்
இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள்
ஈடுபட்டு வரும் நிலையில், குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு
வருகின்றன. இந்நிலையில், மதுரை எல்லீஸ் நகர் போக்குவரத்து பணிமனையில்
உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த மலைச்சாமி என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்க
முயன்றிருக்கிறார். இதனால், அவரை சக ஊழியர்களான பால்பாண்டி, அர்ஜுனன்,
ராமர், ஜெயக்குமார், ரவிசங்கர் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து மலைச்சாமியைத் தாக்கியதாக 5 நபர்கள் மீது காவல்துறையினர்
இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நன்றி : Dailyhunt
Dailyhunt
No comments:
Post a Comment