
சென்னை:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும், சுயேச்சை எம்எல்ஏ டிடிவி
தினகரனையும் ஒரு விஷயத்தில் ஓரணியில் நிற்க வைத்துள்ளார் நடிகர்
ரஜினிகாந்த்.
அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தனிக்கட்சி துவங்கி
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம்
தேதி அறிவித்து நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், ஆன்மீக அரசியலை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்ததுதான் சர்ச்சைகளுக்கு காரணமானது.
ஆன்மீக
அரசியல் என்ற வார்த்தை பாஜகவை நினைவுபடுத்துவது போல இருப்பது, பாஜகவுடன்
ரஜினிக்கு உள்ள நட்பு, மோடி திட்டங்களுக்கு முந்தியடித்து ரஜினி
டிவிட்டரில் வாழ்த்து கூறியது என பல்வேறு விஷயங்களை முன்வைத்து, ரஜினிக்கு
திராவிட சித்தாந்தங்கள் பேசுவோரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள எதிர்ப்பு அலையில் சரிபாதி இப்போது
ரஜினிக்கு எதிராகவும் திரும்பிவிட்டது.

அதேநேரம்,
விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழகத்தின் சிறு அரசியல் கட்சிகள்
வீரியத்தோடு ரஜினியின் ஆன்மீக அரசியல் பேச்சை கண்டிக்கவில்லை. ரவிக்குமார்
சாடினாலும், கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள திருமாவளவன் வலிக்காத
அளவுக்கான விமர்சனங்களைதான் முன்வைத்துள்ளார். மேலும் ஆன்மீக அரசியல்
என்றால் என்ன என்பதை ரஜினிகாந்த் விளக்கியபிறகுதான் தவறாக இருந்தால்
விமர்சனம் செய்ய முடியும் என்பதே அவரது வாதம்.

ரஜினிகாந்த்தின்
ரசிகர் பலம் மற்றும் தாய்மார்களிடம் அவருக்குள்ள ஆதரவு தெரிந்தே சிறு
கட்சிகள் அவருக்கு எதிராக கடும் சொற்களை பயன்படுத்தவில்லை. வரும் சட்டசபை
தேர்தலில் கூட்டணி வைக்க ரஜினி கட்சி உதவும் என்ற கணக்குகள் காரணமாக
இருக்கலாம். ரஜினி மீதான தனிப்பட்ட மரியாதை மற்றும் நட்பும் இதற்கு காரணமாக
இருக்கலாம். ஆனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற போட்டியில் முந்தியது
டிடிவி தினகரன்தான்.

ஆன்மீக
அரசியல் தப்பாகத்தான் போய் முடியும் என்று தடாலடியாக அறிவித்தார் தினகரன்.
பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்றும் அறிவித்தார். அவரது அடுத்தடுத்த
பேச்சுக்கள், திராவிட சித்தாந்தவாதிகளை அவர் பக்கம் திருப்பியது. திமுக
அதுவரை ரஜினிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைக்கவில்லை. மேலும்,
கருணாநிதியுடன் ரஜினிகாந்த் நட்புறவு வைத்துள்ளதால் பிற்காலத்தில் இவர்கள்
கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற கருத்தும் நிலவியது. இதனால்
திமுகவின் அடிப்படை வாக்கு வங்கி தினகரனுக்கு ஷிப்டாகும் வாய்ப்பு
ஏற்பட்டது.

இதையடுத்து,
திராவிட இயக்கங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்று ஸ்டாலின் நேற்று
பேட்டியளித்தார். அதுவும் மரியாதை நிமித்தமாக கருணாநிதியை ரஜினிகாந்த்
சந்தித்து திரும்பிய சில நிமிடங்களிலேயே அந்த பேட்டி வெளியானது. தங்களின்
அடிப்படை தொண்டர்களுக்கு தங்கள் கொள்கை மீது அவநம்பிக்கை வந்துவிட கூடாது
என்பதற்காக அவசரமாக ஸ்டாலின் இந்த பேட்டியை கொடுத்துள்ளார். அந்த வகையில்
திராவிட சித்தாந்தவாதிகள், பாஜக எதிர்ப்பாளர்கள் வாக்குகளை பெற ஸ்டாலினும்,
தினகரனும் பெரும் போட்டியில் இறங்கிவிட்டனர் என்பது தெளிவாக தெரிகிறது.

No comments:
Post a Comment