
குஜராத் தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்
குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதில் காங்கிரஸ் தோல்வி அடைந்து இருந்தாலும், பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து
ஆட்சியில் இருந்து வந்த பா.ஜ.க.,விற்கு கடுமையான போட்டியை கொடுத்து
இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வெற்றியை இந்த முறை காங்கிரஸ் அங்கு
பெற்றுள்ளது.
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ராகுல் திட்டமிட்டு உள்ளார். 16க்கும்
மேற்பட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவராக சுமார் 30க்கும் மேற்பட்ட பிரச்சாரக்
கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரம் செய்த ராகுலுக்கு முடிவுகள்
திருப்தியாக இருப்பதாக கூறப்பட்டாலும், கடைசி நேரத்தில் வெற்றி கை நழுவியது
குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தது, தேர்தல்
தேதியை தள்ளிப்போட்டு பல்வேறு நலத்திட்டங்களை அவசரம் அவசரமாக
நிறைவேற்றியது, ஜிஎஸ்டியில் மாற்றங்கள் கொண்டு வந்தது என பல விஷயம்
பாஜவுக்கு துணை நின்றது.
பட்டேல் இன மக்கள் எதிர்ப்பு, சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள்
எதிர்ப்பு என ஆளும் கட்சி மீது பல்வேறு தரப்பினர் அதிருப்தியில்
இருந்தாலும் ஆறாவது முறையாக பா.ஜ.க அங்கு வெற்றி பெற்று உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை வரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை
தொகுதிவாரியாக சந்தித்து அவர்களிடம் தோல்வியின் காரணங்கள் குறித்து ஆலோசனை
நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment