6 மாதகால சிறை வாசத்துக்கு பிறகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று விடுதலை- வீடியோ
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற முன்னாள் நீதிபதி கர்ணன், 6 
மாத தண்டனை முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். 6 மாத காலத்தில் அவர் 15 
கிலோ எடை குறைந்து உடல் மெலிந்து காணப்படுகிறார்.
நாட்டிலேயே முதன் முறையாக நீதிபதி ஒருவருக்கு உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனை
 விதித்தது. நீதிமன்றத்தை அவமதித்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் 
மற்றும் 7 நீதிபதிகள் அமர்வு நீதிபதி கர்ணனுக்கு 6 மாத கால சிறைத் தண்டனை 
விதித்தது.
உச்சநீதிமன்ற சிறைத்தண்டனை அறிவிப்பு வந்த கையோடு சென்னை வந்த நீதிபதி 
கர்ணன், தலைமறைவானார். ஒரு மாத கால ஒளிவு மறைவு விளையாட்டிற்குப் பின்னர் 
கடந்த ஜீன் மாதத்தில் கோவையில் வைத்து நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார்.

கர்ணனை வரவேற்ற குடும்பத்தினர்
நீதிபதியாக தனது பணிக்காலம் முடிவடையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்ணன்
 சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தண்டனை முடிந்து இன்று விடுதலையான 
கர்ணனை அவருடைய மனைவி சரஸ்வதி மற்றும் மகன் சுகன் உள்ளிட்டோர் சிறை வாசலில்
 சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கர்ணனின் சட்ட ஆலோசகர் மேத்யூ 
நெடும்பாராவும் உடன் இருந்தார்.

கர்ணணின் சிறை வாழ்க்கை
விடுதலையான கையோடு கொல்கத்தாவின் சாடிலைட் டவுன்ஷிப் புது டவுனில் உள்ள 
வீட்டிற்கு கர்ணன் சென்றுள்ளார். கர்ணனுக்கு சர்க்கரை மற்றும் ரத்த 
அழுத்தம் தொடர்பான இடர்பாடுகள் இருந்ததால் அவர் தனது தண்டனைக் காலம் 
முழுவதையும் சிறையில் இருந்த மருத்துவமனையில் கழித்ததாக சிறைத்துறைத் 
தகல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் நீதிபதி கர்ணனுக்கு சிறப்பு கைதிக்கான 
வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அவர் விரும்பிய புத்தகங்கள் அனைத்தும் 
சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறையினர் கூறியுள்ளனர்.


முடியும் நிலையில் சுயசரிதை
சிறையில் தன்னுடைய சுயசரிதை எழுதவதற்காகவே கர்ணன் நேரத்தை 
செலவிட்டதாகவும்,அதில் முக்கால்வாசி எழுதி முடித்துவிட்டதாகவும் 
சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர். அடுத்த 10 நாட்களில் நீதிபதி கர்ணனின் 
பென்ஷன் தொடர்பான நடைமுறைகளை முடித்துக் கொண்டு கொல்கத்தாவில் இருந்து 
கிளம்பப் போவதாக அவரின் மனைவி சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


ஊழலில் நீதித்துறை பிரச்சாரம்
நீதித்துறையை ஊழல் இல்லாத துறையாக மாற்ற நீதிபதி கர்ணன் விரைவில் தனது 
போராட்டத்தை தொடங்குவார் என்று அவரின் நண்பர் நெடும்பாரா கூறியுள்ளார். 
அவரின் நேர்மையான போராட்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் 
கூறியுள்ளார்.

No comments:
Post a Comment