Latest News

ராகுலுக்கு பெரும் சவாலாகிவிட்ட குஜராத் தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பதவியேற்கவுள்ள ராகுல் காந்திக்கு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பெரும் சவாலாகி விட்டது. இதன் முடிவுகளை பொறுத்தே வரும் மக்களவைத் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்கும் என எனத் தெரிகிறது.

நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தி 2004 மக்களவைத் தேர்தலில் திடீரென போட்டியிட்டார். அப்போது முதல் அவர் தனது கட்சியினரால் பிரதமர் பதவிக்கும் பேசப்பட்டு வருகிறார். 2004 முதல் 2014 வரை தொடர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தது. இதில், எப்போது வேண்டுமானாலும் ராகுல் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. இதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சமீபத்தில் உறுதி செய்திருந்தார். ஆனால் அரசியல் அனுபவமற்றவர் என்ற புகாருக்கு இடமளிக்க விரும்பாத ராகுல் மத்திய அமைச்சர் பதவியைக் கூட ஏற்கவில்லை.

அடுத்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியுடன் வீசத் துவங்கிய நரேந்திர மோடி அலை, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றுசேர வைத்துள்ளது. இதில், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் அவர் தன் தனிப்பட்ட உழைப்பில் காங்கிரஸுக்கு வெற்றி தேடித்தரும்வரை அது சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது. இந்த சூழலில் குஜராத் சட்டப்பேரவைகாகக் களம் இறங்கியுள்ள ராகுல் காந்திக்கு அதன் தேர்தல் பெரும் சவாலாகி விட்டது.

அக்னி பரீட்சை

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முதல் கட்சியாக காங்கிரஸ் தொடங்கியது. இதற்கு தலைமை ஏற்ற ராகுல், முதல் அரசியல் தலைவராக தனித்தே பிரச்சாரக் களத்தில் குதித்தார். இங்கு தேர்தல் முகங்களாக நிற்கும் ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய சமூகத் தலைவர்களிடமும் ராகுலே பேச்சு நடத்தினார். வழக்கத்துக்கு மாறாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இத்தேர்தலில் தீவிரம் காட்டவில்லை. காங்கிரஸுக்கு முதல்வர் வேட்பாளரும் முன்னிறுத்தப்படவில்லை. இதற்கு குஜராத்தில் வெற்றி கிடைத்தால், அதன் முழுப்பலனும் தனது மகனுக்கே கிடைக்கட்டும் என அவர் கருதியதே காரணம் ஆகும். காங்கிரஸ் தலைவராகும் ராகுலை இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கூடுதல் பலன் பெறலாம் என்பது சோனியா காந்தியின் திட்டமாக உள்ளது. காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் மனநிலையில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஒருபகுதியினர் எண்ணமும் இதேபோல் உள்ளது. இதனால் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ராகுலுக்கு ஓர் அக்னி பரீட்சையாக மாறிவிட்டது.

மம்தா, சரத்பவார்

இதற்கிடையே, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலரும் அக்கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர்களும் ராகுல்தான் வரும் மக்களவைத் தேர்தலின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் சிலர் இதை ஏற்கத் தயாராக இல்லை எனத் தெரிகிறது. இந்த சிலரில் இரு முக்கிய கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தங்கள் தலைவர்களையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகின்றன. ஒருவேளை குஜராத்தில் காங்கிரஸ் தோற்றால் இவ்விரு கட்சிகளும் மம்தா பானர்ஜி அல்லது சரத்பவாரை முன்னிறுத்த முயற்சிப்பார்கள். குஜராத்தில் ஒருவேளை காங்கிரஸ் தோற்றாலும் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 80 தொகுதிகள் வரை காங்கிரஸ் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மக்களவையில் பாஜகவை எதிர்க்கும் சக்தி படைத்தவராக ராகுல் கருதப்படுவார். மேலும் குஜராத் தோல்விக்கு பிறகும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்டாயத்துக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்படும். இத்தேர்தலில் பாஜக வழக்கம் போல் மாபெரும் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. இதுமட்டும் நடந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் ராகுலை விடுத்து வேறு ஒருவரை முன்னிறுத்த வலியுறுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

பிராந்திய கட்சிகளின் எதிர்பார்ப்பு

இந்த நிலையில், 2004 மக்களவைத் தேர்தலை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி எதிர்கொண்டது போல் நிகழவும் வாய்ப்புள்ளது. ராகுலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்காத நிலையில், பிரதமர் வேட்பாளரை நிறுத்தாமல் போகலாம். அதில் வெற்றி கிடைத்தால் 2004-ல் மன்மோகன் சிங்குக்கு கிடைத்தது போல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேசமயம், தற்போது ராகுலை நம்பி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் சேரத் தயாராக இல்லை. இவர்கள் மனநிலை மாறவும் குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி அவசியமாகிறது.

இந்தத் தேர்தல், பிராந்திய கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால் வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் முக்கியத்துவம் இழப்பார். இதனால், திமுக, திரிணமூல் போன்ற கட்சிகள் தங்கள் மாநிலங்களில் காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்க முன்வரும். எனவே குஜராத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு அவசியமாகியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.