Latest News

நெடுஞ்சாலைகளில் கிறிஸ்துமஸ், பொங்கல் கொண்டாட்டத்துக்கு தடை கோரி வழக்கு

நெடுஞ்சாலைகளில் கிறிஸ்துமஸ், பொங்கல் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீதான விசாரண ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஓ.ஹேமர்லால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

குமரி மாவட்டத்தில் அருமணையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் அருமணை, கடையாலுமூடு, களியல், பத்துகானி, ஆறுகானி மற்றும் கேரளாவில் நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது மத அமைப்புகள் சாலையின் குறுக்கே மேடை அமைத்து கிறிஸ்துமஸ், பொங்கல் விழாக்களை நடத்தி வருகின்றன. இவ்விழாக்கள் பல நாட்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நாட்களில் உள்ளூர் மக்களும், பிற மக்களும் 50 கி.மீ. தூரம் சுற்றி பிரதான சாலைக்குச் செல்ல வேண்டியதுள்ளது. பொதுமக்கள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்திற்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவது சட்டவிரோதமாகும்.

சாலைகளில் பாதசாரிகள் செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன.

இதனால் போக்குவரத்தைத்  தவிர்த்து வேறு வகையில் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது. இதைமீறி நெடுஞ்சாலைகளில் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே தேசிய நெடுஞ்சாலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் விழாக்கள் கொண்டாட அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.