உ.பி.யின் கான்பூர் ஊரகப்பகுதியின் ஜின்சக்நகர் பஞ்சாயத்துத் தலைவர்
பதவிக்குப் போட்டியிட்ட தீபா கோவிந்துக்கு படுதோல்வி கிடைத்துள்ளது. இவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சகோதரி மகனான பங்கஜ் கோவிந்தின்
மனைவி ஆவார்.
உ.பி.யின் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக
நடைபெற்றன. இதில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட தீபா வாய்ப்பு
கேட்டிருந்தார். இந்த வாய்ப்பு மறுக்கப்படவே அவர் சுயேச்சையாகப்
போட்டியிட்டார். நேற்று மாலை வெளியான அதன் முடிவுகளில், தீபாவிற்கு வெறும்
338 வாக்குகள் கிடைத்துள்ளன. தீபாவிற்கு வாய்ப்பு தர மறுத்த உ.பி. மாநில
பாஜக அப்பதவிக்கு சரோஜினி தேவி கோரி என்பவரை போட்டியிட வைத்தது. சரோஜினி
2000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இங்கு 3180 வாக்குகள் பெற்று
பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சைனோஜி தேவி வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, பாலிவுட் திரைப்பட நடிகரான நவாசுதீன் சித்திக்கீயின்
மைத்துனி சபா சித்திக்கீயும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புதானா பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு
போட்டியிட்ட சபாவிற்கு தேர்தல் வைப்புத்தொகையும் கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment