தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு
செயல்படுத்தாது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம்,
நெடுவாசலில் கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 12ம் முதல் இரண்டாம் கட்ட
போராட்டத்தை தொடங்கினர். தினமும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தி
வருகின்றனர்.
இன்று 91வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கிராமமக்கள்,
விவசாயிகள் திரளாக கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக
கோஷமிட்டனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் பாதிக்கும். குடிநீர்
பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் இடையே நிலவுகிறது.
இதனிடையே நேற்று நெடுவாசல் கிராம மக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில்
சந்தித்தார். அப்போது நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி
கிடையாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனு
அளித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத்,
தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு
செயல்படுத்தாது. விவசாயம் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு
அனுமதிக்காது. இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கடிதம் மூலம்
தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காது எனவும் நெடுவாசல்
போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் எம்.சி.சம்பத்
கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment