கர்நாடக மாநிலத்தில் மணல் கொள்ளையில் மாபியா கும்பல் ஈடுபடுவதை
ஒடுக்கவும், மணல் விலை உயர்வைத் தடுத்து அரசின் கையில் கொண்டுவரவும் மாநில
முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். அதன்படி வெளிநாடுகளில் இருந்து
மணலை இறக்குமதி செய்ய கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கான
ஒப்பந்தப்புள்ளியும் கோரியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மணல் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே
நேரம் காவிரி ஆற்றில் இருந்தும், ஏரி, நதிகளில் இருந்தும் மணலை
திருட்டுத்தனமாக அள்ளி விற்பனை செய்யும் மாஃபியா கும்பலின் அட்டகாசமும்
தினமும் அதிகரித்துள்ளது.
மணல் தேவையை பொறுத்து அதன் விலையும் தாறுமாறாக உயருகிறது. எனவே இந்தப்
பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண கர்நாடக மாநில அரசு புதிய வியூகம் ஒன்றை
வகுத்துள்ளது.
3 லட்சம் மெட்ரிக் டன் மணல்
கர்நாடக மாநிலத்துக்கு ஒரு மாதத்துக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் மணல்
தேவைப்படுகிறது. இதனால் இந்த மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய
உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெண்டர் கோர இறுதி நாள்
இந்த டெண்டர் எடுப்பவர்கள் ஆற்றுமணல் அல்லது கட்டுமான பணிக்கான மணலை
இறக்குமதி செய்து தர வேண்டும். இந்த செயல்பாட்டை கண்காணிக்க மைசூரு சர்வதேச
விற்பனை நிறுவனத்தை நோடல் ஏஜென்ஸியாக அமைத்துள்ளது. சர்வதேச நிறுவனங்கள்
டெண்டருக்கு விண்ணப்பிக்க வரும் 24ம் தேதி கடைசி நாளாகும்.
மணல் தட்டுப்பாடு
இது குறித்து கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்தர் குமார் கடாரியா
கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில் 8 மில்லியன் மெட்ரிக் டன் மணல்
தட்டுப்பாடு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் இந்த
தட்டுப்பாடு தீரும் என்று கருதுகிறோம்.
லாரி மணல் ரூ.70 ஆயிரம்
ஒரு லாரி மணல் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவு தான். ஆனால் மார்க்கெட்டில்
உயர்தர மணல் ரூ.50 முதல் ரூ. 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
குறைந்த தர மணல் ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார்கள்" என்றார்.
இதற்கிடையில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கவும், மணல் விலையை
நிர்ணயிக்கவும் மத்திய சுரங்கத்துறை உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment