தினகரன் ஜெயிலுக்கு போனால் என்ன? போயஸ் கார்டனில் செல்லப்பிள்ளையாக
வளர்ந்த விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக்கி விடலாம் என்று பெங்களூரூ
சிறையில் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது
குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக வட்டார தகவல்கள்
தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு விரட்ட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு
கூறினாலும் அடுத்தடுத்து அதிமுக தலைமைக்கு அவரது குடும்பத்தினரே
முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
சசிகலாவின் திட்டம்
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பொதுச்செயலாளராக சசிகலா, முதல்வராக நினைத்தார்.
அதற்காக காய் நகர்த்தினார். ஆனால் விதி அவரை சொத்துக்குவிப்பு வழக்கில்
சிறைக்கு தள்ளியது. சிறையில் இருந்து ஆட்சியை நடத்தி விடலாம் என்று
கட்சியின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார். இவரை நியமனம்
செய்தது, சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு பிடிக்கவில்லை.
உடைந்த அதிமுக
அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. தற்போது இரட்டை இலையைப் பெற தேர்தல் ஆணைய
அதிகாரிகளுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில்
தினகரன் கைதாகி அவரது அனைத்து கனவுகளும் சுக்கு நூறாக நொறுங்கியது.
தினகரனுக்கு நெருக்கடி அதிகரிக்கத்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளை
இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சசிகலா குடும்பம்
சசிகலா குடும்பத்தை நீக்கினால் அணிகளை இணைக்கலாம் என்று ஓபிஎஸ் அணி
கூறுகிறது. தினகரனை நீக்கி விட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், சசிகலா,
டிடிவி தினகரனை நீக்க முடியாது என்று தற்போது தினகரனின் ஆதரவாளர்கள் கூறி
வருகின்றனர்.
துணைப் பொதுச்செயலாளராகும் விவேக்
இந்த சூழ்நிலையில்தான் கட்சி, ஆட்சியை தங்களின் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொள்ள விவேக் ஜெயராமனை துணைப்பொதுச்செயலாளராக நியமிக்க உள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் மற்றும் அண்ணி
இளவரசிக்கும் மகனாகப் பிறந்தவர் தான் விவேக் ஜெயராமன்.
போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளை
ஜெயலலிதா வீட்டில் வளர்ந்து வந்த விவேக் பள்ளி படிப்பைக் கோவையில் உள்ள
சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் முடித்தார். பின்னர் ஆஸ்திரேலியாவில்
உள்ள மேகாரரி கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்கல்லுரியில் இலங்கலை
பட்டமும், 2013ஆம் ஆண்டுப் புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் கல்லூரியில் எம்பிஏ
மார்க்கெட்டிங் படிப்பை முடித்தார். பெங்களூரில் வேலை செய்து வந்த அவர்,
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அதிமுகவினரால் அறியப்பட்டுள்ளார்.
ஆட்டிப்படைக்கும் விவேக்
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இல்லாத நிலையில் தற்போது அதிமுகக் கட்சியை
ஆட்டி படைப்பது விவேக் ஜெயராமன் தான் என்று கூறப்படு
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அவரது சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்று
உளவுத்துறை அளித்த அறிக்கையில் அது விவேக் ஜெயராமன் என்பது
தெரியவந்துள்ளது.
தினகரனின் தளபதியா?
திவாகரன் தரப்பை அதிமுகவுக்குள் நுழையவிடாமல் தினகரனின் தளபதியாக நின்று
வருகிறார் விவேக் ஜெயராமன். இதனால் கடுப்பில் உள்ளாராம் திவாகரன். அண்ணன்
மகன்தான் என்றாலும் தனது மகனை அரசியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என்ற
ஆதங்கம் திவாகரனுக்கு உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் நடக்கும் மோதலை
வைத்தே அறிந்து கொள்ளலாம்.
ம்எல்ஏக்கள் ஆதரவு
விவேக் ஜெயராமன் படித்தவர், இளம் வயது என்பதால் கட்சியை வழி நடத்த சரியான
நபர் என்று சில எம்எல்ஏக்களும் கருதுகிறார்களாம். போயஸ் தோட்டத்தில் சிறு
வயதில் இருந்து வளர்ந்தவர் என்பதாலும், ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவர்
என்பதாலும் மக்களின் ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று கூட்டி கழித்து கணக்கு
போடுகிறார்களாம் சில எம்எல்ஏக்கள்.
கணக்கு சரியா வருமா?
அதிமுகவில் ஜெயலலிதாவிற்குப் பிறகு பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்
பதவியில் 72 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து அதிகாரம் செலுத்த முடியவில்லை.
ஒருவேளை விவேக் ஜெயராமனை சசிகலா அறிவித்தால் அவரை அமைச்சர்களோ, கட்சியின்
மூத்த நிர்வாகிகளோ ஏற்றுக்கொள்வார்களா? அல்லது போட்டுக்கொடுத்தல் மூலம்
இவரும் மத்திய அரசின் சீற்றத்திற்கு ஆளாவாரா?
No comments:
Post a Comment