ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கை அமரன், நேற்று
ரஜினியை சந்தித்தபோது அவர் ஆதரவு அளித்ததாக மாநிலத் தலைவர் தமிழிசை
சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் பாஜக சார்பில் வேட்பாளர் யார் என்று அலசி கொண்டிருந்த வேளையில்
பண்ணை வீட்டை சசிகலா, தினகரன் குரூப் அபகரித்ததால் நேரடியாக பாதிக்கப்பட்ட
கங்கை அமரனை வேட்பாளராக பாஜக அறிவித்தது.
இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட
இல்லத்தில் கங்கை அமரன் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு
என்றும் ரஜினியிடம் வாழ்த்து பெற கங்கை அமரன் சந்தித்தார் என்று
கூறப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே நகர் மக்களின் நலன் கருதி ஆதரவு கேட்ட கங்கை அமரனுக்கு
ரஜினி ஆதரவளிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் புழங்கும் என்பதால்
நல்லுள்ளம் கொண்ட ரஜினியின் ஆதரவை கங்கை அமரன் கோரினார்.
அதற்கு ரஜினிகாந்தும் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார். இதனால் ரஜினி
ரசிகர்களும், பாஜக தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் தேர்தல் பணிகளில்
சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
ஆனால் இதுதொடர்பாக ரஜினியோ அல்லது கங்கை அமரனோ எவ்வித பேட்டியையும்
கொடுக்காத நிலையில் தமிழிசை கூறுவது புதுக்கதையாக உள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டை
ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறிய அந்த ஒற்றை வார்த்தையால்
அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படு
தோல்வி அடைந்தது என கூறப்பட்டது முதல் ரஜினி வாய்சுக்கு மதிப்பு
கூடிவிட்டது. இப்போது ரஜினி சொல்லாமலேயே, தமிழிசை டப்பிங் கொடுத்துவிட்டார்
போலும்.
No comments:
Post a Comment