தமிழகத்தின் புதிய ஆளுநராக கர்நாடக முன்னாள் முதல்வர்
எஸ்.எம்.கிருஷ்ணா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக மேலிட வட்டார தகவல்கள்
தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் கர்நாடக
முதல்வராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், வெளியுறவுத்துறை
அமைச்சராகவும் பதவி வகித்த பிறகு, மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தார்.
கர்நாடக காங்கிரசில் முதல்வர் சித்தராமையா கை ஓங்கியபிறகு, கிருஷ்ணா
புறக்கணிக்கப்பட்டார். கோபமடைந்த அவர், பாஜகவில் இணைய சம்மதித்துள்ளார்.
நாளை முறைப்படி அவர் பாஜகவில் இணைகிறார்.
கிருஷ்ண கிருபை
கர்நாடகாவில் பெருவாரியாக உள்ள ஒக்கலிகர் (கவுடா) இன மக்களின் வாக்குகளை
கவர அதே ஜாதியை சேர்ந்த கிருஷ்ணா பாஜகவுக்கு பயன்பெறுவார்.
அதுமட்டுமில்லாமல், அண்டை மாநிலமான தமிழகத்தின் ஆளுநராக இவரை நியமிக்க பாஜக
திட்டமிட்டுள்ளதாம்.
நாளை இணைகிறார்
பாஜகவில் கிருஷ்ணா அதிகாரப்பூர்வமாக நாளை இணைந்த பிறகு, எப்போது
வேண்டுமானாலும் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் தகவல்
அறிந்தவர்கள்.
பணிச்சுமை
தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர்
ராவ்தான் கவனிக்கிறார். இரு பெரும் மாநிலங்களின் நிர்வாக சுமை அவரை
வாட்டுகிறது. எனவே, எஸ்.எம்.கிருஷ்ணா நியமனம் பற்றிய அறிவிப்பு கூடிய
விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
எதிர்த்த ஜெயலலிதா
கர்நாடக முன்னாள் அமைச்சர் சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட
வாய்ப்பு இருந்தபோது ஜெயலலிதா தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக
செய்திகள் வெளியாகியிருந்தன. காவிரி விவகாரம் இரு மாநிலங்களுக்குள்ளும்
நீறுபூத்த நெருப்பாக இருப்பதால் கர்நாடகாவை சேர்ந்தவர் தமிழக ஆளுநராக
நியமிக்கப்பட கூடாது என்பது ஜெயலலிதா தரப்பு வாதமாக இருந்ததாம்.
எதிர்ப்பு கிடையாது
இப்போது, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மோடி அரசை எதிர்த்து குரல்
கொடுக்காது என்ற நம்பிக்கை பாஜக தலைமைக்கு உள்ளது. எனவே கிருஷ்ணாவை
ஆளுநராக நியமிக்க ஆளும் வர்க்கத்திடமிருந்து எதிர்ப்பு வராது என்று
நினைக்கிறது பாஜக. ஒருவேளை வேறு பக்கங்களில் இருந்து எதிர்ப்புகள் வந்தால்,
அப்போது குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு ஆளுநர்
வாய்ப்பு கொடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment