கோவாவில் மொத்தமுள்ள 40 பேரவை தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும்,
காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க
தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியுமே வெல்ல முடியவில்லை என்ற நிலையில் சிறு
கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியது.
ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்துள்ளார். பெரும்பான்மையை
நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். மனோகர் பாரிக்கர் தலைமையிலான
பாஜக அரசு இன்று பதவியேற்க திட்டமிட்டுள்ள நிலையில், அதிக இடங்களில்
வெற்றி பெற்ற காங்கிரசைதான் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர்
அழைத்திருக்க வேண்டும் என கூறி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில்
வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஹேகர் மற்றும் தருண் கோகாய் தலைமையிலான
அமர்வு இன்று விசாரித்தது.
உங்களுக்கு அரசு அமைக்க போதிய எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளதா என்று, காங்கிரஸ்
சார்பில் ஆஜரான சிங்வியிடம், நீதிபதி தருண் விஜய் கேள்வி எழுப்பினார்.
அதேபோல எந்த கட்சியுமே பெரும்பான்மை பெறாத நிலையில், எந்த கட்சியை
ஆட்சியமைக்க அழைப்பது என்பதை ஆளுநர் முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது என்று
தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இது அரசியல்சாசன அதிகாரம் தொடர்பானதே தவிர எண்ணிக்கை தொடர்பானது கிடையாது
என்றார் தலைமை நீதிபதி. ஆளுநர் என்பவர் அரசியல் சாசன அதிகாரம் கொண்டவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அரசு அமைப்பதைவிட, அரசு அமைத்த பிறகு ஆதரவு இல்லாமல்
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தால்தான் அது மோசம் என்றும்
தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
மனோகர் பாரிக்கர் அரசு தங்களுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பலம்
இருப்பதாக கூறி அவர்களின் ஒப்புதல் கடிதங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளது. இதை
இல்லை என நிரூபிக்க நீங்கள் என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள் என நீதிபதிகள்,
காங்கிரஸ் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
பாஜக சார்பில் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கேட்டு கோரிக்கை
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் அப்படி கோரிக்கை
வைக்கவில்லையே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக அரசுக்கு 15 நாட்கள் ஆளுநர்
அவகாசம் கொடுத்துள்ளது குதிரைபேரத்திற்கு வழிவகுத்துவிடும் என்று அபிஷேக்
சிங்வி வாதிட்டார். ஏன் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர்
உத்தரவிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, வரும் 16ம்தேதி அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை, காலை 11
மணிக்கு கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று
உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
அதேநேரம், காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை
வாக்கெடுப்புக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற சிங்வியின், கோரிக்கையை
நீதிபதிகள் புறக்கணித்தனர். ஆளுநர் தீர்மானித்தபடி பாஜகவுக்கே முதல்
வாய்ப்பு என கூறிய சுப்ரீம்கோர்ட் 16ம் தேதி பாஜக அதை நிரூபிக்க வேண்டும்
என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேநேரம் ஆளுநர் கொடுத்த 15 நாள்
காலக்கெடுவை 2 நாட்களாக குறைத்துவிட்டது சுப்ரீம் கோர்ட். இதனால் கோவா
அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
No comments:
Post a Comment