வரும் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்
யாரையும் ஆதரிக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவனும், சிபிஐ மாநில
செயலாளர் முத்தரசனும் கூட்டாக அறிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் ஆர்.கே.
நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும்
என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, திமுக, அதிமுக, தேமுதிக
ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தார்.
மநகூவில் பிரிவு
இந்நிலையில், மநகூவில் இருந்து விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று
கட்சிகளில் சிபிஎம் மட்டும் வேட்பாளரை நிறுத்துவது என்று அறிவித்து
லோகநாதனை வேட்பாளராகவும் நேற்று அறிவித்தது. இதனால் 3 கட்சிகளிடையே பிரிவு
ஏற்பட்டது.
அவசர ஆலோசனை
இதனைத் தொடர்ந்து, மநகூவில் உள்ள விசிக, சிபிஐயும் என்ன நிலைப்பாடு
எடுப்பது என்று இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தியாகராயர் நகரில் உள்ள சிபிஐ
அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் திருமாவளவனும், முத்தரசனும்
கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: விடுதலை
சிறுத்தைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை
புறக்கணிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
சிபிஐ முடிவு
நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களில் மதவாத கட்சியான பாஜக மற்றும் அதனை
இயக்கும் ஆர்.எஸ்.எஸ், எவ்வாறு வலுபெற்றிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும். இது மாபெரும் அச்சறுத்தல். இந்த அடிப்படையில்தான் இந்த
இடைத்தேர்தலையும் பார்க்க வேண்டும் என்று சிபிஐ வலுவாக முன் வைத்தது.
சிபிஎம் கறார்
சிபிஎம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பதிலும், அதனை மறுபரிசீலனை செய்ய
வேண்டும் என்பதில் சிபிஐயும் உறுதியாக இருந்தது. இப்படி மாறுபட்ட
கருத்துகள் ஏற்பட்டுள்ளதால் மநகூ ஒற்றுமையை கருத்தில் கொண்டு விசிக தனியே
எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருந்தது.
யாருக்கும் ஆதரவில்லை
இந்நிலையில்தான் யாரை ஆதரிக்கவும் வேண்டாம், போட்டியிடவும் வேண்டாம் என்ற
முடிவு இன்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசனோடு நடைபெற்ற கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, விசிக, சிபிஐ தேர்தலில் போட்டியிடாது
மற்றும் யாரையும் ஆதரிக்காது. மேலும், 3 கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து
சமூக பணிகளை ஆற்றுவோம் என்று திருமாவளவன் கூறினார்.
No comments:
Post a Comment