சசிகலா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு
தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு செய்தாலும் கூட அது அவர்களுக்குப் பலன்
தராது என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று கீழ்
நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலா, இளவரசி,
சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்படவுள்ளனர். ஆனால் மறு ஆய்வு மனு
செய்யப் போவதாக அதிமுக முன்னணித் தலைவரும், லோக்சபா துணைத் தலைவருமான
தம்பித்துரை கூறியுள்ளார்.
ஆனால் இதில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்று சட்ட
நிபுணர்கள் கூறுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறு ஆய்வு மனு
போட்டாலும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வர சாத்தியமில்லை. பதிலுக்கு
அவருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உடனே போய் பெங்களூர்
நீதிமன்றத்தில் சரணடையவே உத்தரவிட வாய்ப்புள்ளது.
காரணம், இந்த
வழக்கில் அரசியல் சட்ட பிரச்சினைகள் ஏதும் எழுப்பப்படவில்லை. கீழ்
கோர்ட்டிலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முறையாக
விசாரிக்கப்பட்டே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிலையில்
இறுதித் தீர்ப்புக்கு பின் அதை எதிர்த்து எந்தக் குற்றவாளியும் மறு ஆய்வு
மனு தாக்கல் செய்யவே முடியாது. அப்படியே செய்தாலும் பெரும்பாலும் அதை
உச்சநீதிமன்றம் நிராகரிக்கவே செய்யும்.
மூத்த சட்ட நிபுணரும்,
முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொரப்ஜியும் இதையே கூறியுள்ளார். சசிகலா
மறு ஆய்வு கோரலாம். ஆனால் அதை சுப்ரீம் கோர்ட் ஏற்க வேண்டிய அவசியமில்லை,
ஏற்கும் என்றும் கூற முடியாது என்று அவர் விளக்கியுள்ளார்.
மொத்தத்தில் சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்லத் தயாராக வேண்டியதுதான்.,
No comments:
Post a Comment