எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தீக்குளித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில்
தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட நிலையில் அவருக்கு எதிர்ப்புகளும்
கடுமையாக கிளம்பியுள்ளன. அதேபோல் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி
மக்களிடையே எதிர்ப்பு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா
தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). நகர அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். கடந்த 16 ஆம் தேதி புதிய
முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டதை டி.வி.யில்
பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி
ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார்.
மேலும் அவர் அங்கிருந்த டி.வி.யையும் அடித்து நொறுக்கினார். பின்னர் அவர்
வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக்
கொண்டதாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், வலியால்
ஆறுமுகம் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்
ஓடிவந்து, ஆறுமுகத்தை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதல் உதவி
சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
No comments:
Post a Comment