நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும்
திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து
சென்னையில் ஐ.டி. ஊழியர்கள் பேரணி நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு
எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து
வருகின்றனர். தமிழ் நாட்டில் இயற்கை சூழல் கெட்டு பாலைவனமாக மாறிவிடும்
என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, தஞ்சை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு தமிழக
விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பை அடுத்து மீத்தேன் திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கியது.
இந்த சூழலில், ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும்
பட்டியலிடப்பட்டுள்ள 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்
பகுதியையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும்
எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்களை
புறக்கணித்து போராட்டத்தை நடத்தினர்.
இந்த நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து
செய்யக்கோரி சென்னை ஐ.டி. ஊழியர்கள் இன்று பேரணி மேற்கொண்டனர். நெடுவாசலில்
ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
சோழிங்கநல்லூரில் ஐ.டி. ஊழியர்கள் ஏராளமானோர் பேரணி சென்றனர். பதாகைகளுடன்
ஐ.டி. ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு யுக புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஐ.டி ஊழியர்கள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment