தமிழக சட்டசபையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை நம்பிக்கை
வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி
தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ல்
மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று
அதிமுகவில் பெரும் சர்ச்சை வெடித்தது. ஆர்.எம். வீரப்பனின் ஆதரவுடன்
முதல்வரானார் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன்.
ஆனால் அதை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 132 சட்டசபை
உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர்;
மீதமுள்ளவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். அப்போதைய சபாநாயகராக இருந்த
பி.எச்.பாண்டியனும் ஜானகி அணியை ஆதரித்தார்.
மேலும், அவர் ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார்.
இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு 1986-ல் திமுகவின்
10 உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை
எரித்தற்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
எனவே சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ல் இருந்து 191 ஆகக்
குறைந்ததிருந்தது. ஜானகி தலைமையிலான அணியின் அரசு மீதான நம்பிக்கை
வாக்கெடுப்பு கடந்த 1988-ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது.
திமுக, இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில்
பங்குபெறவில்லை. ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளியேற்றப்பட்டதால், 111
எம்எல்ஏக்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஜானகி அணி
வென்றதாக அறிவித்தார் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன்.
இருந்தாலும் வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம்
காட்டி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக்
கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.
அதேபோல் 28 ஆண்டுகளுக்கு பின்னர் அதிமுகவுக்கு தற்போது தர்மசங்கடமான நிலை
ஏற்பட்டுள்ளது. தற்போது ஓ.பி.எஸ் - சசிகலா என கட்சி இரண்டாக
பிளவுபட்டுள்ளது. இருப்பினும் சட்டசபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின்
பலம் அதிமுகவுக்கு உள்ளது.
ஆனால், இப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள்
வரையே ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலா தரப்பினர் தங்களுக்கு 124
எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளனர்.
இரு அணிகளாகப் பிரிந்துள்ள சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ள 10
எம்.எல்.ஏ.க்கள் சசிகலா ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்
சாய்வார்களா அல்லது சசிகலா தரப்பிலுள்ள 124 எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேர்
ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்து அவரது தலைமையை ஏற்பார்கள் என்பது சட்டசபையில்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போதே தெரிய வரும். இவ்வாறு இரு
அணியினரும் தங்களது பலத்தை நிரூபிக்க காத்திருப்பதால் நாளை நடைபெறும்
நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment