பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது என்கிற மத்திய அரசின்
அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி
தலைவர் வேல்முருகன் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா என்கின்ற நாடு, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். பல
மொழிகள், பல சமயங்கள், பல்வேறு நாகரிகங்கள் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பாக
இந்திய நாடு திகழ்கின்றது. இதில் எந்தத் துறையில் ஒரு ஆக்கிரமிப்பு
நிகழ்ந்தாலும், உரிமைகளில் கை வைத்தாலும் இந்திய ஒருமைப்பாடு ஆட்டம் கண்டு
விடும்.
தொன்றுதொட்டுத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பண்டிகை தை முதல் நாள்
பொங்கல் நன்னாள் ஆகும். அந்த நாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்கள்
பட்டியலில் இதுவரை இடம் பெற்று இருந்தது. தற்போது கிடைத்து இருக்கின்ற
செய்தியின்படி, மத்திய அரசு அந்தப் பட்டியலில் இருந்து தை முதல் நாளை
நீக்கிவிட்டு, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாகக் கொண்டாடலாம்
என்று அறிவித்து இருப்பது மன்னிக்க முடியாத அநீதி ஆகும்.
தீபாவளிப் பண்டிகையை பிற சமயத்தினர் கொண்டாடுவது இல்லை. அதுபோல
இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் கொண்டாடும் பண்டிகைகளைப் பிற சமயத்தினர்
கொண்டாடுவது இல்லை. ஆனாலும் அந்த நாள்கள் கட்டாய விடுமுறை நாளாகக்
கொண்டாடும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மகாவீரர் பிறந்தநாளை இந்தியா முழுமையும் கொண்டாடுவது இல்லை. ஆனாலும்
அம்மாமனிதரின் உயர்வைக் கருதி, மத்திய அவரது பிறந்த நாள் அனைத்து
இந்தியாவிலும் மத்திய அரசின் விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தசரா பண்டிகையும் இந்தியா முழுமையும் கொண்டாடப்படுவது இல்லை. அதுவும்
கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தமிழர்களின் தொல் பழங்கால விழா நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வந்த
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மத்திய அரசு தடை செய்தது, தமிழர்களின்
இதயத்தில் வேல் பாய்ந்த வேதனை ஆகும். அந்தத் தடையை நீக்கக் கோரித் தமிழகமே
கொந்தளித்துள்ள நிலையில், தை முதல் நாளைக் கட்டாய விடுமுறை நாள்களின்
பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி இருப்பது, வேல் பாய்ந்த புண்ணில்
சூட்டுக்கோலைத் திணிக்கின்ற கொடுமை ஆகும். தமிழர் நாகரிகத்தின் மீதும்,
பண்பாட்டின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகவே கருதுகின்றேன்.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு, தை முதல்
நாள் விடுமுறையை இதுவரை இருந்த வந்த கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில்
மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள கண்டன
அறிக்கை:
தமிழகத்தின் வாழ்வுரிமைகளை இல்லாது ஒழிக்கவும் கலாசார பண்பாட்டு
அடையாளங்களை அழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு நாள்தோறும் இந்திய பாஜக
அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்வெளிப்பாடாக தற்போது தமிழரின் தேசிய
திருநாளான பொங்கல் திருநாளுக்கான பொதுவிடுமுறையை ரத்து செய்துவிட்டது
மத்திய பாஜக அரசு.
பொங்கல் திருநாள் என்பது தமிழரின் ஒரே ஒரு பண்பாட்டு அடையாளம். பல்லாயிரம்
ஆண்டுகாலமாக தமிழர் வாழ்வியலோடு இணைந்த இந்த இனத்தின் அடையாளத் திருநாள்.
பொங்கல் திருநாள், அதற்கு மறுநாள் ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு
நிகழ்ச்சி நடைபெறுவது பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழினம் கடைபிடித்து வரும்
பண்பாட்டு நிகழ்வு. முதலில் ஜல்லிக்கட்டை முடக்கிய இந்திய அரசு இப்போது
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான தமிழர் தேசிய திருவிழாவான பொங்கல்
திருநாள் விழாவை அழிக்க களமிறங்கியுள்ளது.
இதுவரை பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை விடப்பட்டு வந்தது. ஆனால்
மத்திய பாஜக அரசோ இதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து
கொள்ளலாம் என கூறியுள்ளது. இந்திய மத்திய அரசின் பணியாளர்களாக இருக்கும்
தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடுவதை தடுக்கும் சதிச்செயல்தான் இது.
தமிழர்கள் இனரீதியாக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்ற மனுவாத சிந்தனையின்
வெளிப்பாடுதான் இந்த தான்தோன்றித்தனமான முடிவு. ஜல்லிக்கட்டு தடைக்கு
எதிராக எங்கள் தமிழ் இளைஞர்கள் வீதிக்கு இறங்கிவந்து போராட
துணிந்துவிட்டனர்.
இந்த எழுச்சியை எதிர்கொள்ள திராணியற்ற இந்திய மத்திய அரசு இப்போது பொங்கல்
திருநாள் பொதுவிடுமுறை ரத்து என அறிவித்து எங்களது உணர்வுகளை கொந்தளிப்பை
மடைமாற்ற நினைக்கிறது. இந்திய மத்திய பாஜக அரசு தமிழர்களின் இனமான உணர்வோடு
விளையாடுவது என்பது தன் தலையில் நெருப்பை அள்ளி கொட்டுகிற செயல்தான்.
இதுபோன்ற இனமான உணர்ச்சிகளோடு விளையாடிப் பார்த்தால் விளைவுகள் எப்படியான
விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை இந்திய மத்திய அரசுக்கு தமிழக இளைஞர்கள்
உணர்த்தப் போகும் காலம் வந்துவிட்டது. தமிழ் மக்களின் இனஉணர்வு
கிளர்ந்தெழுந்தால் இந்திய துணைக்கண்டமே தாங்காது என்பதை மோடிகள் நினைவில்
கொள்ளட்டும்.
தமிழரின் மான உணர்ச்சியை சீண்டிப் பார்க்கும் இத்தகைய அறிவிப்புகளை
இந்திய பாஜக அரசு உடனே திரும்பப் பெறுவதுதான் அந்த அரசுக்கும் ஆளும் பாரதிய
ஜனதாவுக்கும் நல்லதாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக
எச்சரிக்கை விடுக்கிறது என்று கூறியுள்ளார்.
டி.கே.ரெங்கராஜன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழகத்துக்கு பொங்கல் மிக முக்கியமான பண்டிகையாகும். மத்திய அரசின்
2017-ம் ஆண்டிற்கான விடுமுறைகள் தினப் பட்டியலில் ஜனவரி 14 பொங்கல் தினம்
பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை. மாறாக விருப்ப விடுமுறை தினமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகாறும் பொங்கல் தினம் பொது விடுமுறை தினமாகவே அறிவிக்கப்பட்டு
வந்துள்ளது. இந்த ஆண்டில் பொங்கல் தினம் சனிக்கிழமையில் வந்தாலும் தபால்
நிலையங்கள், பாதுகாப்புத் துறையின் அலுவலகங்கள், மத்திய சுகாதாரத்துறை
திட்ட அலுவலகங்கள் போன்ற மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள்
சனிக்கிழமைகளில் இயங்குவதை தாங்கள் அறிவீர்கள்.
தமிழக மக்கள் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொங்கல் திருநாள் தமிழக
மக்களின் மிக முக்கியமான திருநாளாகும். எனவே பொங்கல் தினத்தை தமிழகத்தில்
பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இப்பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்''
என்று டி.கே. ரங்கராஜன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment