4500 ரூபாய் பணம் எடுக்க முயன்றபோது 80 ஆயிரம் மதிப்புக்கு
நோட்டுக்கள் வந்து கொட்டிய சம்பவம் மைசூரில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கர்நாடக மாநிலம், மைசூர் நகரின், கும்பார கொப்பல் பகுதியிலுள்ளது கனரா
வங்கி ஏடிஎம். இங்கு சுந்தரேஷ் என்பவர் பணம் எடுக்க சென்றார். நாள்
ஒன்றுக்கு 4500 வரை எடுத்துக்கொள்ள விதிமுறை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்
அவரும் அதே மதிப்புக்கான பொத்தான்களை அழுத்தியுள்ளார்.
ஆனால் என்ன ஒரு இன்ப அதிர்ச்சி..! பொத் என்று வெளியே வந்து விழுந்ததோ,
மொத்தம் 80 ஆயிரம் ரூபாய்கள். அத்தனையும் 2000 ரூபாய் நோட்டு.
"திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்குன்னு வந்ததாம் வாழ்வு.." என்ற சொலவடையை
நினைவு கூர்ந்து மகிழ்ந்துள்ளார் சுந்தரேஷ். தாம் பெற்ற இன்பம் பெருக
இவ்வையகம்.. என நினைத்த சுந்தரேஷ் தனது நண்பர்களுக்கு போன் செய்து தகவலை
தெரிவித்து அவர்களையும் வந்து 'அள்ளிக்கொண்டு' செல்லுமாறு அழைத்துள்ளார்.
சுந்தரேஷின் 5 நண்பர்கள் ஏடிஎம் வந்து அவர்களும் 80 ஆயிரத்தை பெற்றுள்ளனர்.
வரும் வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் பண மழை கொட்டியதால் அதிர்ச்சியடைந்த
சுந்தரேஷும் நண்பர்களும், கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல்
கொடுத்துவிட்டனர்.
விரைந்து வந்த அதிகாரிகள் ஏடிஎம்மை மூடிவிட்டு சோதித்து பார்த்தனர். 100
ரூபாய் தாள் வைக்க வேண்டிய இடத்தில் 2000 நோட்டுக்களை வைத்துவிட்ட ஏடிஎம்
பணம் நிரப்பும் ஊழியர்களின் தவறால் இதுபோல நடந்துவிட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து பணம் எடுத்து சென்றவர்களுக்கெல்லாம் போன் செய்த வங்கி ஊழியர்கள்
அவற்றை திரும்ப பெற்று வருகிறார்களாம்.
இந்த சம்பவம் மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment