ஜெயலலிதாவின் மறைவையொட்டி காலியாக உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பதவியை
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கொடுக்கலாம் என்று எம்பி சசிகலா புஷ்பா
தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிரந்த முதல்வர் என்று சொல்லப்பட்டவர் ஜெயலலிதா. அவர் உடல்
நலமின்றி நேற்று முன் தினம் மறைந்தார். இதனால் அவர் வகித்து வந்த பொதுச்
செயலாளர் பதவி காலியாகிவிட்டது. இதனையடுத்து யார் அடுத்த பொதுச் செயலாளர்
என்ற கேள்வி அதிமுகவினரிடையே மட்டுமல்ல; தமிழக மக்களிடையேயும் கேள்வியாக
உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் எம்பி சசிகலா புஷ்பா
பேசும் போது, அதிமுகவின் பொதுச்செயலர் பதவிக்கு பிஹெச் பாண்டியன்,
பண்ருட்டி ராமச்சந்திரனை தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார். மேலும்,
மதுசூதனன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கண்ணப்பன் ஆகியோரையும்
பொதுச் செயலாளராக்கலாம் என்று சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் ஆக்கப்படலாம் என்று ஜெயலலிதா
மருத்துவமனையில் இருந்த போதே பேசப்பட்டு வந்த நிலையில், சசிகலா புஷ்பா வேறு
சிலரை பொதுச் செயலாளராக ஆக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே, சசிகலா
நடராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சசிகலா புஷ்பா வைத்து வருகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment