ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் முதல்வராக ஏற்கனவே அனுபவம் வாய்ந்த
ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஓ. பன்னீர்
செல்வத்திற்கு மத்திய அரசு ஆதரவு இருந்தாலும், சசிகலா ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை என்பது தற்போது
கண்கூடாக தெரிகிறது.
ஜெயலலிதா மரணமடைந்து 13 நாட்கள் ஆகிறது. 11வது நாள் காரியம் முடியும் வரை
பொறுமை காத்த பலரும் தற்போது வெளிப்படையாக எதிர்ப்பை காட்டத்
தொடங்கியுள்ளனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்று போயஸ்
கார்டனுக்கு சென்று கேட்டுக்கொண்டனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் போயஸ்
கார்டனுக்கு வந்து சசிகலாவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென சசிகலா முதல்வராக பொறுப்பேற்ற வேண்டும் என்று
அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன்,கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார்
கோரிக்கை வைத்து வருகின்றனர். சசிகலா முதல்வராக கோரி மொட்டை அடிக்கப்
போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
மதுசூதனன் ஆகியோர் தொண்டர்கள் புடைசூழ மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
உதயகுமார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதிமுகவிற்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின்
விருப்பம் என்றும் ஆர்.பி உதயகுமார் கூறினார்.
மக்கள் சேவையில் அனுபவம் வாய்ந்த சசிகலா, அரசியல் பணியில் ஈடுபடவேண்டும்
என்றும் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய மதுசூதனன்,
சின்னம்மாவை தவிர வேறு யாரும் தகுதியானவர் இல்லை. அவர்தான் கட்சிக்கும்,
அரசுக்கும் தலைமையேற்க வேண்டும் என்று கூறினார்.
நேற்று வரை அதிமுகவிற்கு பொதுச்செயலாளராக வேண்டும் என்று சசிகலாவிற்கு
கோரிக்கை வைத்தவர்கள் இப்போது முதல்வராக வேண்டும் என்று கூறி வருவது புது
புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனி
என்ன செய்யப் போகிறார்களோ? அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சி வெற்றிகரமாக
நிறைவடையுமா? காலம்தான் பதில் சொல்லும்.


No comments:
Post a Comment