வர்தா புயலின் பாதிப்பால் குடிக்க தண்ணீர் இல்லை, செலவுக்கு கையில்
பணம் இல்லை, மின்சாரம் இல்லை என்று சென்னைவாசிகள் புலம்பிக்
கொண்டிருக்கிறார்கள்.
வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. புயல் கரையை
கடந்தபோது சென்னையில் கனமழை பெய்தது. மேலும் பேய்க்காற்று வீசியது. சென்னை
வரலாற்றில் முதல்முறையாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று
வீசியது.
பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
திங்கட்கிழமையில் இருந்து சென்னையில் மின்வினியோகம் இல்லை.
மின்வினியோகம்
மின்கம்பங்களை அகற்றி சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இன்று மதியம்
அல்லது மாலைக்குள் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என்று மின்சாரத் துறை
அமைச்சர் தங்கமணி நேற்று தெரிவித்தார். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே
மின்வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம்
மின்வினியோகம் இன்று இரவுக்குள் சீரமைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி இன்று
தெரிவித்துள்ளார். மின்சாரம் இல்லாமல் சென்னைவாசிகள் அல்லாடி
வருகிறார்கள்.
செல்போன்கள்
மின்சாரம் இல்லாததால் செல்போன்களை சார்ஜ் போட முடியவில்லை. சார்ஜ்
போட்டாலும் தொலைத்தொடர்பு சாதனங்களின் சிக்னல் பிரச்சனை வேறு. இதனால்
சென்னைவாசிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
தண்ணீர்
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடாக உள்ளது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து
கிடப்பதால் லாரிகளில் மெட்ரோ தண்ணீரும் கொண்டு வரப்பட முடியவில்லை.
பணம்
ஏற்கனவே பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு பல ஏடிஎம்களில் பணம்
இல்லை. இந்நிலையில் வர்தா போட்ட பேயாட்டத்தால் பணம் உள்ள ஏடிஎம்களை
பார்ப்பது அரிதாக உள்ளது. செலவுக்கு கையில் பணம் இல்லாமல், தொலைத்தொடர்பு
சாதன சிக்னல் பிரச்சனையால் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த
முடியாமலும் சென்னை மக்கள் தவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment