நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதை கவணத்தில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி தனி கவணம் செலுத்தி அந்த 100 நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். நமது பிரதமர் இதை செய்வாரா?.
செல்வந்தர்களின் வாராக் கடனை வசூல் செய்தாலே நாடு மிக வேகமாக
முன்னேற்றம் அடையும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
கே.வெங்கடசாமி கூறியுள்ளார்.
போலி ஆவணங்களை கொடுத்து வங்கிக்கு ரூ.58 லட்சம் இழப்பு ஏற்படுத்திய
வழக்கில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை சிபிஐ சிறப்பு
நீதிமன்றம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதி கே.வெங்கடசாமி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளின் மேலதிகாரிகள் செயல்பாடுகளால் இந்திய
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதை காண முடிகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் தாக்கல் செய்த
அறிக்கையில் இந்தியாவில் 100 நபர்களுக்கு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட
கடன்களில் வராக் கடனின் அளவு ரூ.14
லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு பழைய உயர் மதிப்பு
நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து அதன் மூலம் ரூ.15 லட்சம் கோடி
கருப்புப் பணம் ஒழியும் என்று ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து, 2
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக புழக்கத்தில் விடப்பட்டன. இந்த பணத்தை
வாங்க ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தினமும் வரிசையில் நின்றுகொண்டு
சிரமப்படுகிறார்கள்.
இருந்தபோதிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த நடவடிக்கைக்கு ஆதரவு
தெரிவித்து வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை
செயல்படுத்த வேண்டியது வங்கி அதிகாரிகள்தான். ஆனால், அதைவிட்டு விட்டு பழைய
நோட்டுகளுக்கு பதிலாக பணத்தை பொதுமக்களுக்கு வழங்காமல் பெரும்
செல்வந்தர்களிடம் வங்கி அதிகாரிகள் மொத்தமாக வழங்கியிருக்கிறார்கள் என்பதை
செய்திகளில் காண முடிகிறது. வங்கியில் உள்ள சாதாரண அதிகாரிகளால் இதை செய்ய
முடியாது.
வங்கிகளின் முக்கிய அதிகாரிகளால் மட்டுமே இந்த காரியங்களை செய்ய
முடியும். உயர் மதிப்பிலான நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு
வராக்கடன் விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணக்கூடிய 100
நபர்கள் மட்டும்தான் இந்த வராக்கடனை பெருமளவில் வைத்துள்ளனர். ஏழைகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய முடியும்போது 100 செல்வந்தர்கள்
மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுத்து வராக்கடனை வசூலிக்க முடியாது.
எனவே, மத்திய அரசு வராக்கடன் வைத்திருக்கும் செல்வந்தர்கள் மீது அந்த கடனை
வழங்கிய வங்கிகளின் மேலதிகாரிகளின் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ்
கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த கடன்களை வசூலித்தால் இந்தியா மிக வேகமாக
முன்னேற்றம் அடையும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment