500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நடவடிக்கையை
கண்டித்து, 12 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றம் எதிரில் உள்ள
காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சி
துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 200 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பையும் அதனைத் தொடர்ந்து மத்திய அரசின்
நடவடிக்கைகளையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பாக
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில்
ஈடுபட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற
அறிவிப்பை கண்டித்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த கூட்டம் நேற்று
டெல்லியில் நடைபெற்றது. இதன் முடிவில், இன்று காலை காந்தி சிலை அருகில் 12
கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தப்பட
தீர்மானிக்கப்பட்டது.
12 கட்சிகள் போராட்டம்
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 9.45 மணியளவில் காங்கிரஸ், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக,
திரிணமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட 12 கட்சிகளைச் சேர்ந்த
எம்பிகள் நாடாளுமன்றத்தின் முன்பு ஒன்று கூடினார்கள். பின்னர், மத்திய அரசு
கொண்டு வந்துள்ள ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டிக்கும்
வாசகங்களை கொண்ட அட்டைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் குதித்த ராகுல்காந்தி
பாஜக அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து
எதிர்த்து வருகிறார் ராகுல்காந்தி. மக்களோடு மக்களாக வரிசையில் நின்று
தன்னிடம் இருந்த 4000 ரூபாய் பழைய நோட்டை மாற்றி தனது எதிர்ப்பை
ராகுல்காந்தி தெரிவித்தார். மேலும், ரூபாய் நோட்டு தொடர்பாக
நாடாளுமன்றத்தில் மோடி வாய் திறந்து பேசாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
பேசி வருகிறார் என்றும் கடுமையாக சாடினார். இதனைத் தொடர்ந்து, இந்த தர்ணாப்
போராட்டத்திலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவரது தலைமையில் காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த எம்பிக்களான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ச்சுன கார்கே
உள்ளிட்ட அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டனர்.
ஒன்றிணைந்த அதிமுக, திமுக
எந்தப் பிரச்சனையானாலும், காவிரி பிரச்சனை உள்பட எலியும் பூனையுமாக
இருக்கும் அதிமுகவும் திமுகவும் இந்த தர்ணா போராட்டத்தில் ஒன்றாக
பங்கேற்றன. அதிமுக சார்பில் அனைத்து எம்பிக்களும் நவனீதகிருஷ்ணன் தலைமையில்
போராட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக சார்பில் எம்பிக்கள் திருச்சி சிவா,
கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
2வது முறையாக நடக்கும் பெரிய போராட்டம்
இதே போன்று கடந்த வாரம் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை திரும்பப் பெறக்
கோரி மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின்
குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே 13 கட்சிகளின் பிரதிநிதிகள்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒன்று கூடி பேரணி
நடத்தினார்கள். முடிவில் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, தற்போது 12 கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை
நாடாளுமன்றம் அருகில் நடத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment