தமிழர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு கன்னடர்களை சிக்கலில் மாட்டிவிட்டனர்
என்று கூறியுள்ளார் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் கர்நாடக மாநில தலைவரும்,
முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி.
பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர்
அடித்து உதைத்த காட்சி சோஷியல் மீடியாக்களில் கடந்த வாரம் சனிக்கிழமை
வெளியானது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை
எடுக்கவில்லை.
எனவே, இதற்கு பதிலடி தருகிறேன் என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் கன்னட வேன்
டிரைவரை தமிழ் அமைப்பினர் அடித்து உதைத்தனர். இந்த காட்சியும் சோஷியல்
மீடியாக்களில் வெளியானது. ஊடகங்களிலும் வெளியானது. சென்னையில் உட்லாண்ட்ஸ்
ஹோட்டலிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பினர் பெரும் வன்முறைகளை
அரங்கேற்றினர். தமிழக பதிவெண் கொண்ட வண்டிகள், தமிழர்களின் உடமைகள் தேடி
தேடி எரிக்கப்பட்டன. இதனால் நகரமே பற்றி எரிந்தது. தீயை கொளுந்துவிட்டு
எரியச்செய்யும் தன்மை பெட்ரோலுக்கு மட்டுமல்ல, தண்ணீருக்கும் உண்டு என்று
என்று காண்பித்தது காவிரி கலவரம்.
இந்த வன்முறை சம்பவம் உலக அரங்கில் பெங்களூருக்கு தலைகுனிவை
ஏற்படுத்திவிட்டது. சர்வதே பத்திரிகைகளும் தண்ணீருக்காக இந்தியாவின் அண்டை
மாநிலங்கள் போடும் ஒரு சண்டையை பாரீர்.. என தலைப்பிட்டு இதுகுறித்த
செய்திகளை வெளியிட்டன.
பெயர் கெட்டது
பெங்களூர் வன்முறை காரணமாக தொழில்துறைக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது என இந்திய தொழில் மற்றும் வர்த்தகசபை பகிரங்கமாக
குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட், இன்போசிஸ் போன்ற உலக புகழ் பெற்ற
நிறுவனங்கள் பெங்களூரை விட்டு வெளியேறலாமா என யோசிக்கும் அளவுக்கு
சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூர் பெயர் கெட்டுள்ளது. சொந்த
மக்களின் ஒரு பிரிவினராலேயே, கெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தந்திரம்
இந்நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு இதுபற்றி கருத்து சொன்ன குமாரசாமி,
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது
என்பதைத்தான் இந்த கலவரம் காண்பிக்கிறது. இதில் தமிழகம் மிகச்சிறப்பான
தந்திரத்தை கையாண்டு கர்நாடகாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.
கர்நாடகா பலி
ராமேஸ்வரத்தில், கன்னட நபரை தாக்கியதால்தான் பெங்களூரில் பெரும் கலவரம்
ஏற்பட்டது. ஆனால், பெங்களூர் கலவர பூமியாக்கப்பட்டது. கன்னடர்கள்
நாகரீகமற்றவர்கள், கலவர விரும்பிகள் என்ற தோற்றம் தேசத்துக்கே
காட்டப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தின்போது தமிழகம் அமைதிப்பூங்காவாக
இருப்பதை போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் இந்த
தந்திரத்திற்கு கர்நாடகா பலியாகிவிட்டது, என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார்.
டிவி சேனல்களும் புலம்பல்
கன்னட டிவி சேனல்கள் பலவும் கூட இதே கதையை அவிழ்த்துவிட்டன. அவை ஒருபடி
மேலே போய்.., "தமிழகத்தின் 'சகுனி' சதிக்கு கர்நாடகா பலியாகிவிட்டது.
கன்னடர்களின் உணர்ச்சிவசத்தை தூண்டி அவர்களுக்கு தமிழர்கள், அவப்பெயரை
ஏற்படுத்திவிட்டனர்.." என எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றின. ஆனால்,
வன்முறையை தூண்டும் செய்திகள் ஒளிபரப்பக்கூடாது என, மத்திய அரசின் தகவல்
ஒளிபரப்புத்துறை சுற்றறிக்கை வெளியிட்ட பிறகே, இப்போது அந்த சேனல்கள்
அடக்கி வாசிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் ஈர்ப்பு
தமிழகம் அமைதியாக இருப்பதையும், தமிழகத்தில் கர்நாடக பஸ்களுக்கு போலீஸ்
பாதுகாப்பு அளித்துள்ளதையும் ஒப்பிட்டு பெங்களூர் வன்முறையை அதனோடு
பொருத்தி மீம்ஸ்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ் நெட்டிசன்கள்
தேசத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையை
பயன்படுத்தி தொழில் முதலீடுகளை தமிழகம் ஈர்க்க முயலுமா என்பது
கேள்விக்குறி.
No comments:
Post a Comment