காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கர்நாடகாவில் போராடவில்லை என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா நீரை திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. கர்நாடகா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமிழகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பான படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இது சர்ச்சையை கிளப்பியது.
திருமா மறுப்பு ஆனால் இதனை திட்டவட்டமாக திருமாவளவன் இன்று மறுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
நிரந்தர தீர்வு தேவை காவிரி, சிறுவாணி, மேகதாது, பாலாறு போன்ற அண்டை மாநில நதிநீர் பிரச்சனை முக்கியமானதாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மெத்தனம் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்து அந்த குழு பிரதமரை நேரில் சந்தித்து தமிழக உரிமையை நிலை நாட்டிட வலியுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு மெத்தன போக்குடன் பிடிவாதம் செய்து வருகிறது.
தமிழகத்துக்கு எதிராக போராடவில்லை இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கவில்லை. கர்நாடகாவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் செயல்படுவதாக சமூக வலைதளங்களில் சில படங்கள் வெளியாகியுள்ளது. இது பழைய படம். இதை வைத்து கன்னட அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழக நலனில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் அக்கறை கொண்டு இருக்கும்.
சித்தராமையா கடிதத்துக்கு வரவேற்பு 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பது வரவேற்கத்தக்கது. தலித்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


No comments:
Post a Comment