நலிவடைந்தோருக்கு எதிரான தாக்குதல் தேசத்தின் அடிப்படை குணத்திற்கு எதிரானது. எனவே, அதனை எதிர்த்து அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். இன்று இந்தியாவில் 70வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருப்தி... 5-வது முறையாக சுதந்திர தினவிழாவையொட்டி உங்களிடம் உரையாற்றுகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் அமைதியான முறையில் அதிகாரம் ஒரு கட்சியிடம் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறியதிலும், ஒரு அரசிடம் இருந்து இன்னொரு அரசிடம் மாறியதிலும், ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு மாறியதிலும் ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் என்னால் திருப்தி காண முடிகிறது.
ற்றுமை... இந்த 4 ஆண்டுகளில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேசத்தின் வளர்ச்சிக்காக ஒன்றாக இணைந்திருப்பதையும் காண்கிறேன். சில நேரங்களில் அவைகளிடையே ஒருபுறம் கூக்குரல் சிந்தனை இருந்தாலும் கூட நாட்டின் வளர்ச்சி ஒற்றுமை, நேர்மை, பாதுகாப்பு ஆகியவை தொடர்பான விஷயங்களில் அவை ஒன்றாக இணைந்திருப்பதையும் பார்க்கிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா... அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், சரக்கு மற்றும் சேவை வரி மீதான அரசியல் சாசனத்தின் 122-வது சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் எவ்வித பாகுபாடும் இன்றி ஒன்றாக இணைந்தது, பாராட்டத்தக்க விஷயம் ஆகும். இத்தகைய முயற்சிகள் நம்மிடம் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு ஜனநாயக முதிர்ச்சி இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.
சாட்சி... நாட்டில் தொடர்ச்சியாக 2 வறட்சிகள் ஏற்பட்ட போதிலும் கூட நாட்டின் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வேளாண் உற்பத்தி நிலையாக இருக்கிறது. இது நாடு சுதந்திரம் பெற்ற பின்பு இந்தியாவில் திறனும், வளர்ச்சியும் மேம்பட்டு வருவதற்கு சாட்சியாக உள்ளது.
வளர்ச்சி... நமது கடந்த கால பெருமைகளை கொண்டாடினாலும், அதையே கவுரவமாக கருதிக் கொண்டிருக்கக் கூடாது. எதிர்காலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். அதற்காக அனைவரும் ஒத்துழைத்து செயல்பட, புதுமைகளை கண்டறிய, முன்னேற்றம் காண இதுவே சரியான தருணம். சமீப காலங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவ்வப்போது, 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியையும் கண்டுள்ளது.
முன்னேற்றம்... சர்வதேச முகமைகள் உலகில் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வருவதை ஒப்புக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் பெரிதும் மேம்பாடு அடைந்திருப்பதை உணர்ந்து கொண்டும் உள்ளன. தொடங்கிடு இந்தியா இயக்கம் மற்றும் நமது இளம் தொழில்முனைவோர் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். எனவே, நமது வலிமையை அதிகரித்து, அதை தக்க வைக்கும் வகையில் இன்னும் முன்னேற்றம் காண்போம்.
போராட வேண்டும்... உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன. ஒன்றும் அறியாத மக்கள் கொல்லப்படுகின்றனர். ஈவு இரக்கமற்ற, மனிதாபிமானம் இல்லாத இதுபோன்ற சில குழுக்களை அண்மையில் பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா, நைஜீரியா, கென்யா மற்றும் நமது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றில் காண முடிந்தது. இந்த பயங்கரவாத சக்திகளால் உலக நாடுகளின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இந்த உலகம், ஒன்றாக திரண்டு நிபந்தனையின்றி இவர்களுக்கு எதிராக போராடவேண்டும்.' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment