விவி மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜன் தடையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரர் குமரேசன் திடீரென புகார் தெரிவித்துள்ளார். அதிமுக மேலிடத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தொழிலதிபர் வைகுண்டராஜன். ஜெயா டிவி தொடங்குவதில் மிக முக்கியப் பங்கு வகித்தவரும் கூட. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வைகுண்டராஜன் நியூஸ் 7 என்ற தனி டிவி சேனலை தொடங்கினார். ஒருகட்டத்தில் வைகுண்டராஜனின் தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வைகுண்டராஜனின் தாது மணல் கடத்தல் வெகுஜோராக நடைபெற்று வந்தது. அண்மையில் ஜெயலலிதாவுக்கு எதிராக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா செயல்பட்டுவருவதின் பின்னணியில் வைகுண்டராஜன் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலர்களையும் வைகுண்டராஜன் தரப்பு திரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சென்னையில் இன்று வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது குமரேசன் கூறியதாவது:
தடையை மீறி தொடர்ந்து வைகுண்டராஜன் தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார் வைகுண்டராஜன். அவரது விவி மினரல்ஸ் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையால் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். தாது மணல் கடத்தலை ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார் வைகுண்டராஜன். முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல் 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வைகுண்டராஜன் மீதான அத்தனை புகார்களுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளோம். எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய தாது மணல் கடத்தலை தமிழக முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும். வைகுண்டராஜனின் சொத்துகளையும் தமிழக அரசு முடக்க வேண்டும். இவ்வாறு குமரேசன் கூறினார். வைகுண்டராஜன் மறுப்பு இதனிடையே குமரேசனின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அளித்து வைகுண்டராஜனின் விவிமினரல்ஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குமரேசனின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை; செக் மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் குமரேசன் மீது நிலுவையில் உள்ளன. தொழில்போட்டியாளரின் தூண்டுதலால் குமரேசன் பேட்டி அளித்துள்ளார். எண்ணம், செயல் ஆகியவற்றை அடிக்கடி மாற்றும் மனக்கோளாறால் குமரேசன் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment