தன் மெத்தப்படிப்பையும் அதனால் பெற்ற அரசுப்பணிகளையும்,
பொறுப்புகளையும் தனிமனிதனுக்கான சக்தியாக வைத்துக்கொள்ளாமல் இளைஞர்கள்,
குழந்தைகள் என அனைவருக்கும் தன்னம்பிக்கை ஒளிக்கீற்றை பரவ விடும் சக்தியாக
விளங்கியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இந்தியாவின்
முதற்குடிமகன் பொறுப்பை வகித்தவரானாலும், பொறுப்பு முடிந்ததும் மறுதினமே
இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பெடுக்கு வகுப்பறைக்குள் ஒரு ஆசிரியராக
நுழைந்த ஆச்சர்ய மனிதர் அவர்.
உத்வேகம் தரும் அவரது பேச்சு ஒரு தலைமுறை இளைஞர்களின் திசையை மாற்றியிருக்கிறது; மாற்றிக்கொண்டிருக்கிறது. ஊழல் ஒழிப்பு, இலக்கியம், அரசியல், பண்பாடு இந்தியாவின் எதிர்காலம் என ஆனந்தவிகடனின் விகடன் மேடையில் அவர் எடுத்துவைத்த கருத்துக்கள் அபாரமானவை....அவரது நினைவுநாளான இன்று அதில் ஒரு பகுதியை வாசகர்களுக்கு கொடுப்பதில் விகடன் பெருமை கொள்கிறது.
கி.ராஜ்மோகன், மயிலாடுதுறை
உத்வேகம் தரும் அவரது பேச்சு ஒரு தலைமுறை இளைஞர்களின் திசையை மாற்றியிருக்கிறது; மாற்றிக்கொண்டிருக்கிறது. ஊழல் ஒழிப்பு, இலக்கியம், அரசியல், பண்பாடு இந்தியாவின் எதிர்காலம் என ஆனந்தவிகடனின் விகடன் மேடையில் அவர் எடுத்துவைத்த கருத்துக்கள் அபாரமானவை....அவரது நினைவுநாளான இன்று அதில் ஒரு பகுதியை வாசகர்களுக்கு கொடுப்பதில் விகடன் பெருமை கொள்கிறது.
ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
''நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடுபடும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்."
ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.
''நீங்கள் வாசித்த வரிகளில், நேசித்த வரிகள்?''
''ஹோஷ்மின் உங்கள் கேள்விகள் இரண்டும் நல்ல கருத்துள்ளவை. வாசித்த வரிகளில்
2 + 2 = 4 வரிகள் நான் நேசித்தது.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’
திருக்குறளின் இந்த நாலு வரிகளும் ஒவ்வொருடைய வாழ்விலும் அச்சாணிகளாகத் திகழ வேண்டும்!''
'' 'இவர் இல்லையேல் நான் இல்லை’ என்று நீங்கள் நினைக்கும் மனிதர் யார்?''
''திருவள்ளுவர்!''
பத்மா சபேசன், சென்னை.
''எங்கள் எல்லாரையும் கனவு காணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?''
''நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, என் லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்!''
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
''நம்பிக்கைத் துரோகிகளை என்ன செய்யலாம்?''
''இது ஒரு நல்ல கேள்வி. என்பதில்... மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு. அது இரண்டு நல்ல மனிதர்களை உருவாக்கும்!''
''செப்டம்பர் 14, 2009-ம் தேதி சந்திராயன்-1 திட்டத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகளைப்பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் NASA, JPL, ISRO விஞ்ஞானிகளோடு, நானும் ISRO சேர்மன் மாதவன் நாயரும் கலந்துகொண்டோம். ISROவும், NASAவும் சேர்ந்து உருவாக்கிய M3 (மூன் மினராலஜி மேப்பர்) என்ற சென்சார் உபகரணம், எப்படி HO/H2O தண்ணீர்ப் படிமங்களைக் கண்டுபிடித்தது, என்பதைப்பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை விவாதித்தோம். அப்போது NASA ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைச் சொன்னார். அதாவது, கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது. இந்தியா - அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் M3 தண்ணீரைக் கண்டு அறிந்தது என்று அறிந்தபோது, இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்!''
''உலக அரங்கில் இந்திய ஜனாதிபதிக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லையே! அந்தப் பதவி இந்தியாவுக்குத் தேவைதானா?''
''ஜனாதிபதி பதவியை வகிப்பவரின் தொலைநோக்குப் பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், உயர்ந்த எண்ணமும், செயல்களும்தான், அந்த நாட்டுக்கும், அந்தப் பதவிக்கும் பெருமை சேர்க்கும். ஒவ்வொரு ஜனாதிபதியும், அவர்களின் தனிச் சிறப்பால் நாட்டுக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்!''
சத்தியநாராயணன், சென்னை-38.
''உலக அரசியல் தலைவர்களில் தங்களைப் பிரமிக்கவைத்தவர் யார்?''
''தென் ஆப்பிரிக்காவின் நிற வெறியை எதிர்த்துப் போராடி, அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியும், 26 வருடம் தனிமைச் சிறையில் ராபின் தீவில் இருந்து, தன் பொறுமையால், மனோதிடத்தால், பதவிக்கு வந்து, தென் ஆப்பிரிக்காவில் அடிமை நிலைக்குக் காரணமானவர்களை மன்னித்து, அவர்களையும் அந்த நாட்டுக் குடிமக்களாக அங்கீகரித்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களும்தான் என்னைப் பிரமிக்க வைத்த உலக அரசியல் தலைவர்கள்!''
''தற்போதைய நிலையில் 'இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?''
''சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்!'
சத்தியநாராயணன், அயன்புரம்.
''மரண தண்டனை தேவையா?''
''மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும், என்று நான் ஜனாதிபதியாக இருந்தபோதே, தெரிவித்து இருக்கிறேன். கொடும் செயல்களுக்காக மரண தண்டனை பெற்ற பல கைதிகளின் வரலாற்றைப் படிக்கும்போது, பெரும்பாலும் கல்வி அறிவு குறைந்தவர்களாகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாகவும்தான் இருக்கிறார்கள். கல்வி அறிவு, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் நமக்கு உள்ள அக்கறையின் தன்மையைப் பொறுத்து, குற்றத்தின் தன்மை மாறுபடுகிறது. அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி நாம் பயணப்படும்போது, தெரியாமலும், அறியாமலும், கோபத்திலும் செய்யும் குற்றச் செயல்கள், வன்கொடுமைகள் குறைய வேண்டும். அப்போதுதான் 2020-க்குள் நாம் வளர்ந்த நாடாவோம், என்பதில் அர்த்தம் உள்ளது!''
No comments:
Post a Comment