சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் 5 பேரின் ஜாமின் மனுவை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 5 வழக்கறிஞர்களும் விடுதலை செய்யப்படும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)ல் பல்வேறு திருத்தங்களை கடந்த மே மாதம் அறிவித்தது. இதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட/ உயர்நீதிமன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைகோர்ட் முற்றுகைப் போராட்டம் இந்நிலையில் வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, 126 தமிழக வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்ததால் வழக்கறிஞர்களின் போராட்டம் சூடு பிடித்தது.
596 பேர் கைதாகி விடுதலை இரவில் விடுதலை சென்னை உயர்நீதிமன்றத்தை நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். இதில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள் 15 பேர் உட்பட 596 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையில் அடைப்பு போராட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருணாகரன், யாசர் அராபத், அசோக்குமார், கிஷோர் மற்றும் ஓம்பிரகாஷ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமின் மனு தள்ளுபடி இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 வழக்கறிஞர்களுக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்களின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் ஜாமின் தர மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். போராட்டம் தொடரும் இந்த நிலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களும் விடுதலை செய்யப்படும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5 பேருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காக குழு அமைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment