சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்துள்ளது எப்படி ஒரு அரசின் சாதனையாக இருக்க முடியும் என திண்டுக்கல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தவமணி பத்மாநாபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் பயனற்றது எனக் குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து அவர் தனது பிரச்சாரத்தில் கூறியதாவது:-
பயன் இல்லாத திட்டம்... நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது.எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.அப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக.சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்துள்ளது எப்படி ஒரு அரசின் சாதனையாகும்.
நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம்... எங்கள் ஊரில் கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள்.எப்படி வளரும்? ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது. பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது.இந்தத் தேசம் எப்படி வளரும்...?மாற்றம் தேவை... ஊழல் பெருகி நாட்டின் முன்னேற்றம் சீரழிந்துள்ளது அதனால் மாற்றத்தை கொண்டுவர இந்தத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுதிக்கொள்ளவேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment