பட்டுக்கோட்டை அருகே அதிமுக நிர்வாகியின் வீட்டிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.49.70 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனைகளில் மொத்தம் ரூ.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திட்டக்குடி ஊராட்சியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மா.கோவிந்தராஜ். அதிமுக கிளைச் செயலாளரான இவரது வீட்டில், வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ஆன்-லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுபடி, பட்டுக் கோட்டை சிறப்பு வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று பிற்பகல் கோவிந்தராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.49.70 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கோவிந்தராஜ் உரிய ஆவணங்களை அளிக்காததால், அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து, கீழே விழுந்த கோவிந்தராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திட்டக்குடி ஊராட்சிக்கு அருகில் உள்ள ஆலத்தூர் ஊராட்சித் தலைவரான சி.வி. சேகர், பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் இதுவரை ரூ 84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. •தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 5ம் தேதி வாகன சோதனை மேற்கொண்டபோது, கரூர் மாவட்டத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளும், வேலூர் மாவட்டத்தில் ரூ.6.31 லட்சம், பெரம்பலூரில் ரூ.1.67 லட்சம் கைப்பற்றப்பட்டன. •தருமபுரி மாவட்டத்தில் ரூ.3.33 லட்சம் மற்றும் மது வகைகள், திருவாரூரில் ரூ.10.20 லட்சம், திண்டுக்கல்லில் ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது. •விருதுநகரில் ரூ.1.37 லட்சம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.15 லட்சம் உட்பட மொத்தம் ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்து 690 பறிமுதல் செய்யப்பட்டது. •இதேபோல நிலையான கண்காணிப்புக்குழு நடத்திய சோதனையில், திருப்பூர் மாவட்டத்தில் ரூ.9.14 லட்சம், கோவையில் ரூ.2.41 லட்சம், நாமக்கல்லில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. •வேலூரில் ரூ.1.10 லட்சம், தஞ்சாவூரில் ரூ.3.02 லட்சம் மற்றும் 97 அரிசி மூட்டைகள், கரூரில் ரூ.4.14 லட்சம், நீலகிரியில் ரூ.4 லட்சம், தூத்துக்குடியில் ரூ.2.02 லட்சம், அரியலூரில் ரூ.3.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. •மதுரையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. •விருதுநகரில் ரூ.2.50 லட்சம், சென்னையில் ரூ.22.79 லட்சம், கிருஷ்ணகிரியில் ரூ.2.23 லட்சம் என மொத்தம் ரூ.60 லட்சத்து 72 ஆயிரத்து 780 பறிமுதல் செய்யப்பட்டது. •வருமான வரித்துறையினர் மூலம் இதுவரை ரூ.21.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள மதுவகைகள், பட்டுப் புடவைகள், மெத்தை விரிப்புகள், மப்ளர், டி சர்ட், பனியன் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment