Latest News

நதிகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்: ஸ்டாலின்


தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இந்த உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்போம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது: "உலக தண்ணீர் தினம்" இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1992- ஆம் வருடம் நடைபெற்ற "சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி" குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டு, 1993- ஆம் வருடத்திலிருந்து "உலக தண்ணீர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலக நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் ஏறக்குறைய 80 சதவீதம் வேலை வாய்ப்புகள் தண்ணீர் "தேவை"யை மையமாக வைத்தே இருக்கிறது. அதிலும் குறிப்பாக 40 சதவீத வேலை வாய்ப்புகள் தண்ணீர் "மிகவும் தேவை" என்ற நிலையில் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. விவசாயம், மின் திட்டங்கள், தொழிற்சாலை, மீன் பிடி தொழில்கள், சுகாதாரம் போன்ற நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பல துறைகளுக்கு மிகவும் அதிகமாக தண்ணீர் தேவை என்ற நிலை இருக்கிறது. அதனால்தான் இன்றைய உலக தண்ணீர் தினத்தை "தண்ணீரும், வேலை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் பொருளாதார வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. அதனால்தான் அதன் தேவையை உணர்ந்து செயல்பட்ட திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் முதன் முதலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவங்கியது. பிறகு பல்வேறு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற மிக முக்கியமான குடிநீர் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் எல்லாம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இது மட்டுமின்றி நதி நீர் இணைப்பை மிக முக்கியமாக முன்னெடுத்துச் சென்றது 369 கோடி ரூபாய் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம், 189 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் எல்லாம் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

குடிநீர் திட்டங்களுக்கும், கடல் நீரை நதிநீராக்கும் திட்டங்களுக்கும், நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கும் கழக அரசு போல் தமிழகத்தில் எந்த அரசும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றியதில்லை. ஆகவே இந்த உலக தண்ணீர் தினத்தில் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தண்ணீர் பற்றாக்குறை எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கவும் பாடுபடுவோம். விவசாயத்திற்கு தண்ணீரில்லா நிலை என்றும் வராத வகையில் அதற்கு ஏற்ற திட்டங்களை உருவாக்குவோம். தொழிற்சாலைகள், மின் திட்டங்கள் போன்றவற்றிற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்ற வகையில் புதுப் புது குடிநீர் திட்டங்களை கொண்டு வருவோம். வேலை வாய்ப்புகளை மேலும் பெருக்க சபதம் ஏற்போம். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இந்த உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.