ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் சிறப்பான வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு அம்சங்கள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
புதிய நடவடிக்கைகள், விதிமுறைகள், அமைப்புகள், நிதி ஆதாரங்கள் ஆகியவற்றின் மூலம், ரயில்வே துறைக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் தொலைநோக்குத் திட்டத்தை ரயில்வே பட்ஜெட் வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மேலும் முன்னேற்றம் காண்போம். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இதுவரை தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்களில், பயணிகள் வசதிகளும், ரயில்களின் தரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. ஏழைகள் பயன்பெறும் வகையில் முன்பதிவு வசதியற்ற ரயில்கள் உள்பட புதிய வசதிகள் அறிமுகப்பட்டுள்ளது, அந்த்யோதயா விரைவு ரயில், தீனதயாளு ரயில் பெட்டிகள், ஏழைகளுக்கான எங்களின் பொறுப்புகளின் வெளிப்பாட்டை உணர்த்துகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்தும் விதமாக மேகலாயத்தையும், மிசோரத்தையும் இணைக்கும் ரயில் சேவை மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment