மற்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையும் அவர்களின் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது போல மத்திய அரசு ஏன் அறிவிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வயதுக்கு வந்த இரு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் அல்ல' என்று டெல்லி ஹைகோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிற இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 செல்லாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மேல்-முறையீடு செய்தனர்.
அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி ஹைகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து 2013-ம் ஆண்டு, டிசம்பர் 12-ந் தேதி உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய அந்த 377-வது சட்டப்பிரிவை திருத்துவது அல்லது ரத்து செய்வது பாராளுமன்றத்தின் வேலை, நீதிமன்றத்தின் வேலை அல்ல என்று கூறியது. அதை எதிர்த்து தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓரினச் சேர்க்கையாளர்களால் அப்பாவியான வாழ்க்கைத் துணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சமுதாயத்தில் அதிகரித்து வரும் பிரச்சினையாக உருவாகவில்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஆய்வுகள் எதையும் செய்துள்ளதா? எனவும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உடல் உறவு கொண்டால், அது கிரிமினல் குற்றம் கிடையாது என்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment