மனித நேய மக்கள் கட்சியில் கோஷ்டிப் பூசலின் உச்சகட்டமாக சென்னையில் தமிமூன் அன்சாரியின் தலைமை அலுவலகத்தை இன்று மர்ம நபர்கள் சூறையாடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது.
கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்தது மமக. மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனால் மனித நேய மக்கள் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளர் தமிமூன் அன்சாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகியது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிமூன் அன்சாரி பிரிவின் அமைப்பு செயலாளர் தைமியா நேற்று தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில், மனித நேயக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், ஜவாஹிருல்லாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புதுப்பேட்டையில் உள்ள தமிமூன் அன்சாரியின் கட்சி அலுவலகத்தில் மர்மநபர்கள் புகுந்துத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு, ஜவாஹிருல்லாவின் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று, தமிமூன் அன்சாரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தமிமூன் அன்சாரி தரப்பினர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இரு அணியினரும் அடிக்கடி பிரச்சினையில் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சி தடையாக உள்ளதாகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பமாக உள்ளது.
No comments:
Post a Comment