ஆந்திராவில் கடந்தாண்டு பள்ளிக் கழிப்பறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் நடைபெற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ஹோட்டல் அதிபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மதுப்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 வயதுடைய மாணவி ஒருவர், கழிப்பறையில் பெண் குழந்தையை பிரசவித்தார். அதனைத் தொடர்ந்து யூசுப்குடா பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் இருவரும் அனுமதிக்கப் பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் தான் அம்மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அந்த ஹோட்டல் அதிபரைப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேற்கு வங்காளத்திற்கு தப்பிச் சென்ற அந்த ஹோட்டல் அதிபர், சமீபத்தில் ஹைதராபாத்திற்குத் திரும்பினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், நேற்றிரவு அவரைக் கைது செய்தனர். அவர் மீது சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஹோட்டல் உரிமையாளரின் பெயர் திலீப் சர்க்கார்(39) என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘தான் அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்யவில்லை. என்னிடம் பணத்தை பெற்றுகொண்டு அவளும் விரும்பியே தன்னுடன் உறவு வைத்து கொண்டாள்' எனக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த வழக்கில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment