மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு எதிராக விஸ்வரூபமெடுத்திருக்கும் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தங்கள் வழங்கிய நிறுவனங்கள் போலியானவை என்றும் கீர்த்தி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 14 ஆண்டுகாலம் தலைவராக பதவி வகித்தவர் தற்போதைய நிதி அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண்ஜேட்லி. டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக 2012ஆம் ஆண்டே மத்திய அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்றை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நியமித்திருந்தார்.
சி.பி.ஐ. அதிரடி சோதனை இந்நிலையில் கடந்த வாரம் திடீரென டெல்லி மாநில அரசு தலைமை செயலகம், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்கவே இந்த சோதனை நடைபெற்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அருண்ஜேட்லி கோப்புகள் ஆனால் கேஜ்ரிவாலோ, அருண் ஜேட்லிக்கு எதிரான டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் கோப்புகளை எடுக்கவே சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர் என அதிரடியாக குற்றம்சாட்டி இருந்தார். இதனை அருண்ஜேட்லி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
கீர்த்தி ஆசாத் கலகக் குரல் இதனிடையே பா.ஜ.க. மூத்த தலைவரான அருண் ஜேட்லிக்கு எதிராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.கீர்த்தி ஆசாத் கலகக் குரல் கொடுத்தார். அத்துடன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி ஆசாத், டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான 26 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
போலி நிறுவனங்கள் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி ஆசாத், டெல்லி கிரிக்கெட் சங்கம் பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை; இந்த நிறுவனங்களுக்கான பணப்பட்டுவாடா குறித்து எந்த ஒரு ஆலோசனையுமே நடத்தப்படவில்லை. மொத்தம் 14 போலி நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப் பிரிவு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்
கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு அதேநேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர், இஷாந்த் சர்மா ஆகியோர் அருண்ஜேட்லிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அவதூறு வழக்கு மேலும் தம் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியினர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அருண்ஜேட்லி சாடியுள்ளார்.
No comments:
Post a Comment